மகரவிளக்கு திருவிழாவால் சபரிமலையில் குவியும் பக்தர்கள்
சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடைபெறும் மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு, சாமி தரிசனம் செய்ய லட்சக்கணக்கான பக்தர்கள் திரளாக வந்துள்ளனர்.
மண்டல விளக்கு மற்றும் மகரவிளக்கு பூஜைகளுக்காக, கடந்த ஆண்டு நவம்பர் 16ஆம் தேதி மாலை சபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டது. 41 நாட்கள் நீடித்த மண்டல காலம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, டிசம்பர் 27ஆம் தேதி மண்டல பூஜை நடத்தப்பட்டது. அதன் பின்னர் கோவில் நடை தற்காலிகமாக மூடப்பட்டது.
மகரவிளக்கு திருவிழாவை முன்னிட்டு, டிசம்பர் 30ஆம் தேதி மாலை மீண்டும் நடை திறக்கப்பட்டு, அதன்பிறகு தொடர்ந்து பக்தர்கள் ஐயப்பனை தரிசிக்க அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், திருவிழாவின் உச்ச நிகழ்வாக இன்று மகரவிளக்கு பூஜையும், அதனைத் தொடர்ந்து மகரஜோதி தரிசனமும் நடைபெற உள்ளது. வழக்கமான பூஜைகளுடன் சேர்த்து, பிற்பகலில் மகர சங்கராந்தியை முன்னிட்டு மகர சங்கரம சிறப்பு பூஜை மற்றும் விசேஷ அபிஷேகங்களும் நடத்தப்பட உள்ளன.
இதனைத் தொடர்ந்து, பந்தளம் அரண்மனையிலிருந்து கொண்டு வரப்படும் திருவாபரணங்கள் ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டு, தீபாராதனை நடைபெறும். அச்சமயத்தில், பொன்னம்பலமேட்டில் ஐயப்பன் ஜோதி வடிவில் மூன்று முறை பக்தர்களுக்கு அருள்காட்சி வழங்குவார்.
பின்னர் புஷ்பாபிஷேக வழிபாடுகளும் நடைபெற உள்ளன. மகரவிளக்கு பூஜைக்காக வந்த பக்தர்கள் மலையிலேயே பல இடங்களில் தங்கியிருப்பதால், சபரிமலை முழுவதும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது.
இதனிடையே, பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய சன்னிதானப் பகுதியில் சுமார் 5,500 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்