உக்ரைனை குறிவைத்த ‘ஒரேஷ்னிக்’ ஏவுகணை தாக்குதல்
அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் திறன் கொண்ட ‘ஒரேஷ்னிக்’ (Oreshnik) ஏவுகணையை உக்ரைன் மீது செலுத்தி ரஷ்யா தாக்குதல் நடத்தியதற்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளது.
இதுதொடர்பாக ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை கூட்டத்தில் பேசிய அமெரிக்க துணைத் தூதர் டாமி புரூஸ், இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மேற்கொண்டு வரும் தீவிர முயற்சிகளை ரஷ்யாவின் இந்த நடவடிக்கை பாதிப்பதாக தெரிவித்தார். அமைதியை நிலைநாட்ட அதிபர் ட்ரம்ப் மிகுந்த உறுதியுடன் செயல்பட்டு வரும் நேரத்தில், இத்தகைய தாக்குதல் போரின் தீவிரத்தைக் கூடுதலாக அதிகரிக்கும் அபாயத்தை உருவாக்குகிறது என்றும் அவர் கூறினார்.
மேலும், ரஷ்யா நடத்திய இந்த ஏவுகணை தாக்குதல், நேட்டோ அமைப்பில் உறுப்பினராக உள்ள போலந்தின் எல்லைக்கு மிகவும் அருகாமையில் நடைபெற்றுள்ளது என்பதை அமெரிக்கா சுட்டிக்காட்டியுள்ளது.
இந்தச் சூழலில், ரஷ்ய அதிபர் புதினின் இல்லங்களில் ஒன்றை குறிவைத்து உக்ரைன் தாக்குதல் நடத்தியதாகவும், அதற்கான பதிலடி நடவடிக்கையாகவே ரஷ்யா ‘ஒரேஷ்னிக்’ ஏவுகணையை பயன்படுத்தியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.