பொன்னம்பல மேட்டில் மூன்று முறை பிரகாசமாய் தோன்றிய மகரஜோதி – ஐயப்ப பக்தர்கள் பரவசம்
சபரிமலையில் நடைபெறும் மகர விளக்கு திருவிழாவின் உச்சக்கட்ட நிகழ்வாக கருதப்படும் மகரஜோதி, பொன்னம்பலமேட்டில் மூன்று முறை பிரகாசமாய் தோன்றி, லட்சக்கணக்கான ஐயப்ப பக்தர்களை பரவசத்தில் ஆழ்த்தியது.
மகர சங்கராந்தி இன்று மாலை, சபரிமலை பொன்னம்பல மேட்டில், ஜோதி வடிவில் ஐயப்பன் அருள்பாலிப்பதாக நம்பப்படும் மகரஜோதி, வானில் திடீரென ஒளிவிட்டு தோன்றியது. ஜோதி காட்சியளித்ததை கண்டதும், சன்னிதானம், மாளிகைப்புரம், பந்தளம் உள்ளிட்ட ஜோதி தென்படும் அனைத்து பகுதிகளிலும் கூடியிருந்த பக்தர்கள் ஒரே நேரத்தில் “சுவாமியே சரணம் ஐயப்பா” என சரண கோஷம் எழுப்பினர்.
மகரஜோதி முதலில் ஒளிவிட்டு மறைந்து, பின்னர் இரண்டாவது மற்றும் மூன்றாவது முறையாக மீண்டும் பிரகாசமாக தோன்றியதால், பக்தர்களின் ஆனந்தம் எல்லை கடந்தது. வானில் தோன்றிய அந்த தெய்வீக சுடரை கண்டு, பலர் கண்ணீர் மல்க கைகளைக் கூப்பி வழிபட்டனர்.
மகரஜோதி தரிசனத்திற்காக சபரிமலை சன்னிதானம், மாளிகைப்புரம், மரக்கூட்டம், சரண்குத்தி உள்ளிட்ட பகுதிகளில் பக்தர்கள் வெள்ளம்போல் திரண்டனர். இதனால் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும், பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், சபரிமலை முழுவதும் காவல்துறை மற்றும் சிறப்பு பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டிருந்தனர்.
மேலும், மகர விளக்கு திருவிழாவை முன்னிட்டு வனப்பகுதிகளில் தீ விபத்துகள் ஏற்படாத வகையில் தீயணைப்பு படையினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர். மருத்துவ குழுக்கள், அவசர சிகிச்சை மையங்கள் உள்ளிட்டவையும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
மகரஜோதி தரிசனம் பெற்ற ஐயப்ப பக்தர்கள், இது தங்களின் வாழ்வில் கிடைத்த பெரும் பாக்கியம் என்றும், ஐயப்பனின் அருள் தங்களுக்கு முழுமையாக கிடைத்ததாகவும் தெரிவித்தனர். ஆண்டுதோறும் நடைபெறும் இந்த மகத்தான ஆன்மிக நிகழ்வு, பக்தர்களின் நம்பிக்கையையும் ஐயப்ப பக்தியின் மகிமையையும் மீண்டும் ஒருமுறை உலகிற்கு உணர்த்தியுள்ளது.