ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டம் தீவிரம் – தெஹ்ரானில் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டனர்
ஈரானில் நிலவி வரும் கடுமையான பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வு மற்றும் வேலைவாய்ப்பு பற்றாக்குறை உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு எதிராக, மதகுரு அயதுல்லா அலி கமேனி தலைமையிலான அரசை கண்டித்து கடந்த 10 நாட்களாக மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டங்கள் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், தலைநகர் தெஹ்ரானில் நடைபெற்ற அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
போராட்டத்தில் பங்கேற்றவர்கள், அரசின் பொருளாதார கொள்கைகள் மக்களை கடுமையாக பாதித்துள்ளதாக குற்றம்சாட்டியதுடன், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தவும், மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும் அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். மேலும், அயதுல்லா அலி கமேனிக்கு எதிராக கடும் கோஷங்களை எழுப்பி, அரசின் செயல்பாடுகளை கண்டித்து முழக்கமிட்டனர்.
இதற்கு முன்னர் நடைபெற்ற போராட்டங்களின் போது, போராட்டக்காரர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல்கள் வன்முறையாக மாறியுள்ளன. இந்த வன்முறை சம்பவங்களில் இதுவரை 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. போராட்டங்களை கட்டுப்படுத்த அரசு கடும் அடக்குமுறைகளை கையாண்டுள்ளதாக மனித உரிமை அமைப்புகள் குற்றம்சாட்டி வருகின்றன.
இந்த நிலையில், ஈரான் முழுவதும் ஏற்பட்டுள்ள இந்தப் போராட்டங்கள் வெளிநாட்டு சதியால் தூண்டப்படுவதாக அந்நாட்டு அதிபர் மசூத் பெசெஷ்கியான் குற்றம்சாட்டியுள்ளார். அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானில் குழப்பத்தை ஏற்படுத்த திட்டமிட்டு செயல்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், இளைஞர்கள் வெளிநாட்டு சக்திகளின் வலையில் சிக்கிக்கொள்ள வேண்டாம் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அதே நேரத்தில், மக்களின் நியாயமான கோரிக்கைகள் குறித்து அரசு கவனம் செலுத்தும் என்றும், பொதுமக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அதிபர் மசூத் பெசெஷ்கியான் உறுதியளித்துள்ளார். இருப்பினும், போராட்டக்காரர்கள் அரசு அளிக்கும் வாக்குறுதிகளில் நம்பிக்கை இல்லையென தெரிவித்து, தங்கள் போராட்டத்தை தொடரப்போவதாக அறிவித்துள்ளனர்.
இதனால், ஈரானின் அரசியல் மற்றும் சமூக சூழல் மேலும் பதற்றமடைந்துள்ள நிலையில், இந்த போராட்டங்கள் எத்தகைய திருப்பத்தை எடுக்கும் என்பதைக் குறித்து உலக நாடுகள் உன்னிப்பாக கவனித்து வருகின்றன.