இந்தியா – ஜெர்மனி இடையே 19 புரிந்துணர்வு உடன்படிக்கைகள் கையெழுத்து
இந்தியா மற்றும் ஜெர்மனி நாடுகளுக்கிடையில் பாதுகாப்பு, வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளை உள்ளடக்கிய 19 புரிந்துணர்வு உடன்படிக்கைகள் கையெழுத்தாகியுள்ளன.
பிரதமர் நரேந்திர மோடி விடுத்த அழைப்பின் பேரில், ஜெர்மனி பிரதமர் பிரட்ரிக் மெர்ஸ் இரு நாள் அரசு முறைப் பயணமாக இந்தியாவுக்கு வருகை புரிந்துள்ளார். இதன் ஒரு பகுதியாக, அவர் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து இருதரப்பு கலந்துரையாடல் நடத்தினார்.
இந்த சந்திப்பின்போது, இந்தியா–ஜெர்மனி உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் பாதுகாப்பு, வணிகம் உள்ளிட்ட பல துறைகளில் 19 ஒப்பந்தங்கள் அதிகாரப்பூர்வமாக கையெழுத்திடப்பட்டன.
இதனைத் தொடர்ந்து டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, இந்த உடன்படிக்கைகளில் இரு நாடுகளுக்கிடையிலான பாதுகாப்பு, தொழில்துறை மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்தும் கூட்டு அறிக்கையும் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்தார்.
மேலும், இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீட்டை ஊக்குவிக்கும் நோக்கில் தலைமைச் செயல் அதிகாரிகள் அடங்கிய அமைப்பை உருவாக்குவது உள்ளிட்ட முக்கிய அம்சங்களும் இந்த ஒப்பந்தங்களில் சேர்க்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.