“வா வாத்தியார்” திரைப்பட வெளியீடு: தடையை நீக்கிய நீதிமன்றம்
நடிகர் கார்த்தி நடிப்பில் உருவான “வா வாத்தியார்” திரைப்படத்தை வெளியிடத் தடையிட வேண்டும் என்ற கோரிக்கையை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
திவாலானவராக அறிவிக்கப்பட்ட அர்ஜூன் லால் சுந்தர்தாஸ் என்பவரிடம் இருந்து, ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பு நிறுவனம் பெற்ற கடனுக்கான தொகையை வட்டி உடன் சேர்த்து ரூ.21 கோடியே 78 லட்சத்து 50 ஆயிரத்தை தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா செலுத்த வேண்டும் என வலியுறுத்தி, சொத்தாட்சியர் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், நிலுவைத் தொகை திருப்பிச் செலுத்தப்படும் வரை “வா வாத்தியார்” திரைப்படத்தை வெளியிடக் கூடாது என்று இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்தது.
இதனைத் தொடர்ந்து, படத்தை வெளியிட அனுமதி கோரி தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தரப்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்த போது, ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் ரூ.3 கோடியே 75 லட்சம் மதிப்பிலான காசோலையை ஞானவேல் ராஜா நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.
இதையடுத்து, மீதமுள்ள தொகையையும் செலுத்தினால், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைப்படத்தை வெளியிட அனுமதி வழங்கப்படுவதாக நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதற்கிடையே, ரூ.3 கோடி கடன் தொகையை திருப்பிச் செலுத்தவில்லை எனக் கூறி, “வா வாத்தியார்” திரைப்படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என தனேஷ் அசோசியேட்ஸ் நிறுவனம் சார்பில் மற்றொரு மனுவும் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி செந்தில் குமார் ராமமூர்த்தி, திரைப்பட வெளியீட்டுக்கு தடையிட மறுத்து, மனுவுக்கு பதிலளிக்கும்படி ஞானவேல் ராஜாவுக்கு உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார்.
இந்த அனைத்து சட்ட நடவடிக்கைகளுக்குப் பிறகு, படத்துக்கு விதிக்கப்பட்டிருந்த தடைகள் நீக்கப்பட்டுள்ளதாக ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. அதில், “வா வாத்தியார்” திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம், திட்டமிட்டபடி படம் வெளியாக உள்ளது.