தொடர்ச்சியாக குறையும் தங்கம்–வெள்ளி விலை: வாடிக்கையாளர்கள் உற்சாகம்!
சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை தொடர்ந்து சரிவடைந்து வருவதால் நகை வியாபார சந்தைகளில் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
நேற்று (அக். 22) தங்க விலை ஒரே நாளில் இரண்டு முறை குறைந்து, பவுனுக்கு ரூ.3,680 சரிந்தது. இதன் மூலம், ஒரு பவுன் ஆபரணத் தங்கம் ரூ.92,320க்கு விற்பனையாகியது.
இன்றும் (அக். 23) தங்கம் விலை மேலும் குறைந்தது. 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.40 குறைந்து ரூ.11,500க்கும், ஒரு பவுன் ரூ.320 குறைந்து ரூ.92,000க்கும் விற்பனையாகிறது.
நகை வியாபாரிகள் கூறுவதாவது:
“உலகளவில் தங்கத்தின் மீது முதலீடு குறைந்திருப்பது, விலைச் சரிவிற்கு காரணமாக உள்ளது. இதேபோல் அமெரிக்கா மற்றும் சீனாவுக்கிடையேயான வர்த்தக நிலைமையும் தங்க சந்தையை பாதித்துள்ளது,” என தெரிவித்தனர்.
வெள்ளி விலையும் குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.1 குறைந்து ரூ.174க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.1,74,000க்கும் விற்பனையாகிறது.
தொடர்ச்சியான விலைச் சரிவால், தீபாவளியை முன்னிட்டு தங்கம் வாங்குவோரிடம் ஆர்வம் அதிகரித்துள்ளதாக நகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.