டிரம்ப் மகன் – டென்மார்க் இளவரசி திருமணம் என்ற கற்பனை… கிரீன்லாந்து வரதட்சணையா? வைரலாகும் பதிவு
டென்மார்க் நாட்டின் இளவரசி இசபெல்லாவை, அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பின் மகன் திருமணம் செய்து கொண்டால், கிரீன்லாந்தை வரதட்சணையாகக் கேட்கலாம் என்ற சமூக ஊடகப் பதிவு தற்போது இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
டென்மார்க்கின் கட்டுப்பாட்டில் உள்ள உலகின் மிகப்பெரிய தீவான கிரீன்லாந்து, தன்னாட்சி பெற்ற பிரதேசமாக செயல்பட்டு வருகிறது. இந்தத் தீவு அதன் புவியியல் அமைவிடத்தால் ராணுவ ரீதியாகவும், சர்வதேச அரசியல் ரீதியாகவும் மிகுந்த முக்கியத்துவம் பெற்றதாகக் கருதப்படுகிறது.
இந்தப் பின்னணியில், அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்காக கிரீன்லாந்து அவசியம் என டிரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார். ஆனால், அந்தப் பகுதிகளில் உள்ள அரிய வகை கனிம வளங்களை கைப்பற்றுவதே அவரது உண்மையான நோக்கம் என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன.
இதற்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ள டென்மார்க் அரசு, அமெரிக்க ராணுவம் கிரீன்லாந்துக்குள் நுழைந்தால் துப்பாக்கிச் சூடு நடத்தப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில், சமூக ஊடகமான எக்ஸ் தளத்தில் ஒருவர் வெளியிட்ட பதிவில், அமெரிக்கா கிரீன்லாந்தை பெற விரும்பினால், டென்மார்க் இளவரசி இசபெல்லாவை டிரம்பின் மகன் பாரன் டிரம்ப் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று கிண்டலாகக் குறிப்பிட்டுள்ளார்.
அவ்வாறு திருமணம் நடைபெற்றால், அமெரிக்காவுக்கு வரதட்சணையாக கிரீன்லாந்து வழங்கப்படும் என அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கருத்து இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து, இசபெல்லா மற்றும் பாரன் டிரம்ப் இருவரின் புகைப்படங்களை இணைத்து உருவாக்கப்பட்ட படங்களை நெட்டிசன்கள் பகிர்ந்து வருகின்றனர்.