வங்கதேசத்தில் மீண்டும் ஒரு இந்து இளைஞர் கொடூரமாக தாக்கி கொல்லப்பட்ட சம்பவம்
வங்கதேசத்தில் இன்னொரு இந்து இளைஞர் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
அந்த நாட்டில் சிறுபான்மை சமூகமாக வாழ்ந்து வரும் இந்துக்கள் மீது தொடர்ச்சியாக வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. கடந்த சில வாரங்களில் மட்டும் ஆறு இந்துக்கள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தொடர் தாக்குதல்களுக்கு இந்திய மத்திய அரசு கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தி வந்த நிலையில், அந்த விவகாரத்தின் பதற்றம் தணியுவதற்குள் மேலும் ஒரு கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சுனம்கஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்த ஜாய் மகாபத்ரே என்ற இளைஞருக்கு, உள்ளூர் நபர் ஒருவர் விஷம் கொடுத்து, பின்னர் கடுமையாக தாக்கி சித்திரவதை செய்ததாக கூறப்படுகிறது. மிகவும் மோசமான நிலையில் மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜாய் மகாபத்ரே, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் உயிரைக் காக்க முடியாமல் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த கொலைக்கு காரணமான நபர் மீது உடனடியாக கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியில் வசிக்கும் இந்து சமூகத்தினர் வலியுறுத்தி வருகின்றனர்.