சிரியாவில் ஐஎஸ் தீவிரவாத முகாம்கள் மீது அமெரிக்கா கடும் வான்வழி தாக்குதல்
சிரியாவில் செயல்பட்டு வரும் ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் முக்கிய தளங்களை இலக்காகக் கொண்டு அமெரிக்கா சக்திவாய்ந்த வான்வழித் தாக்குதலை மேற்கொண்டுள்ளது.
கடந்த டிசம்பர் மாதத்தில் சிரியாவில் ஐஎஸ் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், இரண்டு அமெரிக்க ராணுவ வீரர்கள் மற்றும் ஒரு மொழிபெயர்ப்பாளர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்துக்கு கடுமையான பதிலடி வழங்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்னதாகவே எச்சரித்திருந்தார்.
அந்த எச்சரிக்கையின் தொடர்ச்சியாக, “ஆபரேஷன் ஹாக்ஐ ஸ்டிரைக்” என்ற பெயரில் அமெரிக்க ராணுவம் மிகப் பெரிய அளவிலான விமானத் தாக்குதலை நடத்தியுள்ளது.
இந்த நடவடிக்கையின் போது, சிரியாவில் உள்ள ஐஎஸ் அமைப்பின் பயிற்சி மையங்கள், ஆயுத களஞ்சியங்கள் மற்றும் தகவல் தொடர்பு கட்டுப்பாட்டு மையங்களை குறிவைத்து 90-க்கும் அதிகமான துல்லிய ஏவுகணைகள் தாக்குதல் நடத்தப்பட்டன. இதில் பல தீவிரவாதிகள் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்க படைவீரர்களுக்கு சேதம் விளைவிக்கும் எவராக இருந்தாலும், அவர்கள் உலகின் எந்த மூலையில் மறைந்திருந்தாலும், நீதியைத் தவிர்க்க முயன்றாலும் அவர்களை கண்டுபிடித்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்கா கடும் எச்சரிக்கையும் விடுத்துள்ளது.