சபரிமலையில் பெருக்கெடுக்கும் பக்தர் வருகை – பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு சபரிமலையில் பக்தர்கள் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் உயர்ந்து வருவதால், பாதுகாப்பு நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்த காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர்.
ஜனவரி 14 ஆம் தேதி நடைபெற உள்ள மகரவிளக்கு திருவிழாவை ஒட்டி, சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், கோயில் வளாகம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் கடுமைப்படுத்தப்பட்டுள்ளன.
பதினெட்டாம் படி ஏறுவதற்காக நீண்ட வரிசையில் காத்திருக்கும் பக்தர்களை, பம்பை பகுதியில் தற்காலிகமாக நிறுத்தி, நிலைமையை கண்காணித்த பின்னரே காவல்துறையினர் அனுமதி வழங்கி வருகின்றனர்.
ஜனவரி 14 ஆம் தேதி, நேரடி மற்றும் இணைய முன்பதிவு முறைகள் மூலமாக, அதிகபட்சமாக 35 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே தரிசன அனுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மகரவிளக்கு பூஜை கால பாதுகாப்பு பணிகளுக்காக, சபரிமலையில் ஆறாவது கட்ட காவல் படையினர் பொறுப்பேற்றுள்ளனர். சிறப்பு அதிகாரி சுஜித் தாஸ் தலைமையில் பாதுகாப்பு குழுவினர் தங்களின் பணிகளை தொடங்கியுள்ளனர்.
இந்த குழுவில் 11 துணை காவல் கண்காணிப்பாளர்கள் (DYSP), 34 காவல் ஆய்வாளர்கள் (CI) உள்ளிட்ட மொத்தம் 1,534 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மகரவிளக்கு திருவிழா நாட்களில் சபரிமலையில் ஏற்படும் நெரிசலை கட்டுப்படுத்தவும், பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் இந்த விரிவான காவல் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.