உலக தொழில்நுட்ப கவனத்தை ஈர்த்த ஜோஹோ நிறுவனத்தின் தனித்திறன் பொறியாளர்!
மென்பொருள் உலகில் செயற்கை நுண்ணறிவு (AI) ஆதிக்கம் நாள்தோறும் விரிவடைந்து வரும் நிலையில், ஜோஹோ (Zoho) நிறுவனத்தைச் சேர்ந்த ஒரு பொறியாளர், தனிநபராகச் செயல்பட்டு, வெறும் ஒரே மாதத்தில் உருவாக்கியுள்ள உயர் நிலை AI கருவி உலகளாவிய தொழில்நுட்ப வட்டாரங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஜோஹோ நிறுவனத்தின் நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு, அந்தப் பொறியாளரின் அபூர்வமான தொழில்நுட்ப ஆற்றலை நேரடியாகக் கண்டுத் திகைத்ததாகத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சமூக ஊடகமான எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், கடந்த மாதம் அந்தப் பொறியாளர் தம்மிடம் ஒரு புதிய தொழில்நுட்பத் தீர்வை அறிமுகப்படுத்தியதாகவும், அதன் ஆழமான வடிவமைப்பையும், பரந்த பயன்பாட்டு வாய்ப்புகளையும் பார்த்தபோது தாம் உண்மையிலேயே ஆச்சரியமடைந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
சாதாரணமாக ஓர் ஆண்டு முழுவதும் இடைவிடாது உழைத்து உருவாக்க வேண்டிய அளவிலான தொழில்நுட்பத்தை, அந்தப் பொறியாளர் வெறும் ஒரு மாத காலத்திலேயே நிறைவேற்றியுள்ளதாகவும், இதற்கு ‘Opus 4.5 AI’ என்ற மேம்பட்ட மாடல் முக்கிய பங்காற்றியுள்ளதாகவும் ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார்.
மேலும், ஜோஹோ நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளர்களுக்கு சுயமாகப் பரிசோதனை செய்து புதுமைகளை முயற்சிக்க முழு சுதந்திரம் வழங்கப்படுவதாகவும், அந்த சுதந்திரமான சூழலே புதிய கண்டுபிடிப்புகளுக்கான வழிகளை உருவாக்குகிறது என்றும், இப்படியான அனுபவங்களின் மூலமே நாங்கள் தொடர்ந்து கற்றுக்கொள்கிறோம் என்றும் அவர் வலியுறுத்தினார்.