ட்ரம்பின் தாக்கத்தால் தீவிரமடையும் அமெரிக்க நடவடிக்கைகள் – ரஷ்ய எண்ணெய்க் கப்பலை கைப்பற்றிய வாஷிங்டன்
வெனிசுலாவுக்குத் தேவையான எண்ணெயை ஏற்றிச் செல்ல திட்டமிட்டிருந்த ரஷ்யக் கொடியுடன் பயணித்த காலியான எண்ணெய்க் கப்பலை அமெரிக்கா திடீரென கைப்பற்றியுள்ளது. இந்தச் சம்பவம், ரஷ்யா மற்றும் அமெரிக்காவுக்கிடையேயான இராணுவ-அரசியல் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.
கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக, வெனிசுலாவின் வட எல்லையை ஒட்டியுள்ள கரீபியன் கடல் பகுதியில் அமெரிக்கா தனது ராணுவக் கண்காணிப்பையும் படை இருப்பையும் கணிசமாக உயர்த்தி வருகிறது.
சமீபத்தில், வெனிசுலா கடற்கரைக்கு அருகே சென்றுகொண்டிருந்த ஒரு எண்ணெய்க் கப்பலை அமெரிக்க இராணுவம் பறிமுதல் செய்தது. அந்தக் கப்பல் குறித்து வெளியிடப்பட்ட காணொளியில், வெனிசுலா மற்றும் ஈரானில் இருந்து தடைசெய்யப்பட்ட எண்ணெய் கடத்தலில் அந்தக் கப்பல் ஈடுபட்டதாக அமெரிக்க அட்டர்னி ஜெனரல் குற்றம்சாட்டியிருந்தார்.
“ஸ்கிப்பர்” என அழைக்கப்படும் அந்தக் கப்பல், கடல் அபாயங்களை கண்காணிக்கும் வான்கார்ட் டெக் நிறுவனத்தின் தகவலின்படி, நீண்ட காலமாகவே தன் இருப்பிடத்தை மறைத்து போலியான தகவல்களை வழங்கி வந்ததாக கூறப்பட்டது.
இதற்கு முன், 2022ஆம் ஆண்டில், ஹிஸ்புல்லா அமைப்புக்கும் ஈரானின் புரட்சிகர காவல் படைக்கும் நிதியளிக்கும் எண்ணெய் கடத்தலில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டி, அமெரிக்க கருவூலத் துறை அந்த ஸ்கிப்பர் கப்பலுக்கு தடைவிதித்திருந்தது. இந்த நடவடிக்கையை “சர்வதேச கடற்கொள்ளை” என விமர்சித்த வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ, தங்கள் நாடு ஒருபோதும் அமெரிக்காவின் எண்ணெய் ஆதிக்கத்தின் கீழ் செல்லாது என்று கடுமையாகப் பதிலளித்திருந்தார்.
இந்நிலையில், கடந்த வாரம் அமெரிக்காவால் கைது செய்யப்பட்ட வெனிசுலா அதிபரும் அவரது மனைவியும் புரூக்ளின் சிறையில் அடைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இதற்கு முன்னதாக, “பெல்லா-1” என்ற எண்ணெய்க் கப்பலை ஆய்வு செய்ய அமெரிக்க கடலோர காவல்படை முயன்றபோது, தடைகளை மீறி ஈரானின் எண்ணெயைக் கடத்தியதாகக் கூறி, அதை பறிமுதல் செய்ய அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்தச் சூழலில், வட அட்லாண்டிக் பெருங்கடலில் வெனிசுலாவை தொடர்புபடுத்தி இரண்டாவது முறையாக ஒரு எண்ணெய்க் கப்பலை அமெரிக்கா கைப்பற்றியுள்ளது. Marinera என்ற பெயருடைய அந்தக் கப்பல், 14 நாட்கள் தொடர்ந்து துரத்தப்பட்ட பிறகு, அமெரிக்க மத்திய நீதிமன்ற உத்தரவின் பேரில் கைப்பற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக “பெல்லா-1” என அழைக்கப்பட்ட இந்தக் கப்பல், பின்னர் ரஷ்யாவில் பதிவு செய்யப்பட்டு ரஷ்யக் கொடியுடன் Marinera என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இது ரஷ்யாவின் “நிழல் கப்பல் குழு” (Shadow Fleet) ஒன்றின் பகுதியாக இருப்பதாக கூறப்படுகிறது. ஐரோப்பாவை நோக்கி நகர்ந்துகொண்டிருந்த இந்தக் கப்பலை, “நைட் ஸ்டாக்கர்ஸ்” எனப்படும் அமெரிக்க இராணுவ சிறப்பு பிரிவு, பிரிட்டனின் உதவியுடன் கைப்பற்றியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதே நேரத்தில், கப்பலில் இருந்த அனைத்து ஊழியர்களையும் அமெரிக்கா கைது செய்துள்ளதுடன், சர்வதேச தடைகளை மீறிய குற்றச்சாட்டின் கீழ் அவர்கள் மீது குற்றவியல் வழக்குகள் தொடரப்படும் என அறிவித்துள்ளது. Marinera கப்பல் பறிமுதல் செய்யப்பட்டது வெனிசுலாவில் அமைதியை நிலைநாட்டும் முயற்சியின் ஒரு பகுதியாகவே மேற்கொள்ளப்பட்டதாக அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா கைப்பற்றிய அந்தக் கப்பலில் எண்ணெய் எதுவும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இருப்பினும், ஈரான்-வெனிசுலா இடையே ஆயுதங்கள் உள்ளிட்ட சட்டவிரோத வர்த்தகம் இந்தக் கப்பல் வழியாக நடைபெற்றிருக்கலாம் என்ற சந்தேகமும் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கு பதிலளித்த ரஷ்யா, Marinera கப்பல் ரஷ்யக் கொடியின் கீழ் சர்வதேச கடல் பகுதியில் சட்டப்பூர்வமாக பயணித்து வந்ததாகவும், அமைதியான வர்த்தகக் கப்பலை அமெரிக்காவும் நேட்டோவும் நியாயமற்ற முறையில் கைப்பற்றியுள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளது. இது கடல்சார் சர்வதேச சட்டங்களுக்கு முரணான செயல் எனவும் ரஷ்யா கண்டனம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, ஐக்கிய நாடுகள் சபையின் அடிப்படை காலநிலை ஒப்பந்தம் உட்பட 65க்கும் மேற்பட்ட சர்வதேச ஒப்பந்தங்களில் இருந்து அமெரிக்கா விலகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், ரஷ்யாவுக்கு எதிரான புதிய பொருளாதார தடைகள் தொடர்பான மசோதாவுக்கு அதிபர் ட்ரம்ப் ஒப்புதல் வழங்கியுள்ளதாக அமெரிக்க செனட்டர் லிண்ட்சி கிரஹாம் தெரிவித்துள்ளார்.
இந்தத் தடைகள், ரஷ்யக் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்யும் இந்தியா, சீனா, பிரேசில் போன்ற நாடுகள் மீது 500 சதவீதம் வரை வரி விதிக்கும் வகையில் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம், ரஷ்யா-அமெரிக்கா உறவுகளில் புதிய பதற்றக் கட்டம் தொடங்கியுள்ளதாக புவியியல் அரசியல் வட்டாரங்கள் மதிப்பிடுகின்றன.