ED சோதனையில் மேற்குவங்க முதலமைச்சரின் தலையீடு – விதிமீறலா மம்தா பானர்ஜியின் நடவடிக்கை? சட்டத்தின் நிலைப்பாடு என்ன?
கொல்கத்தாவில் அமலாக்கத்துறை மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது, மேற்குவங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி அனுமதியின்றி அந்த இடத்தில் நுழைந்து ஆவணங்களை எடுத்துச் சென்றதாக வெளியான தகவல், நாடு முழுவதும் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது. இந்தச் சூழலில், சோதனை நேரத்தில் முதலமைச்சர் தனது அதிகார எல்லையை மீறியாரா என்ற கேள்வி தீவிர விவாதமாகியுள்ளது.
கொல்கத்தாவில் செயல்பட்டு வரும் ஐ-பேக் (I-PAC) நிறுவன அலுவலகம் மற்றும் அதன் இயக்குநருமான, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு தலைவராக உள்ள பிரதிக் ஜெயின் இல்லத்தில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனைகளே தற்போது முக்கிய பேசுபொருளாக மாறியுள்ளன. இந்தச் சோதனைகளின் போது, அமலாக்கத்துறையின் நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதத்தில் மம்தா பானர்ஜி செயல்பட்டதாக கூறப்படுவது அரசியல் மற்றும் சட்ட ரீதியான மோதலை உருவாக்கியுள்ளது.
இந்த விவகாரத்தில், அமலாக்கத்துறையும், மேற்குவங்க முதலமைச்சரும் தலா கொல்கத்தா உயர்நீதிமன்றத்தை அணுகியுள்ள நிலையில், இந்தச் சம்பவத்தின் பின்னணியைப் புரிந்து கொள்ளுதல் அவசியமாகிறது. மேற்குவங்கம் மற்றும் டெல்லி ஆகிய இடங்களில் மொத்தம் 10 பகுதிகளில் அமலாக்கத்துறை ஒரே நேரத்தில் சோதனை நடத்தியது.
“கிங்பின்” என அழைக்கப்படும் அனுப் மஜீ தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக இந்தச் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில், பெரும் அளவிலான நிதி முறைகேடுகள் வெளிச்சத்திற்கு வந்ததாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. இந்த முறைகேடுகளில், மேற்குவங்கத்தில் முன்னணி எஃகு நிறுவனமாக உள்ள ஷகாம்பரி குழுமமும், அரசியல் ஆலோசனை நிறுவனம் ஐ-பேக்கும் தொடர்புடையதாக இருப்பது கண்டறியப்பட்டது.
2020ஆம் ஆண்டு சிபிஐ பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு தொடங்கிய விசாரணையில், அனுப் மஜீ தலைமையிலான குழு, ஈஸ்டர்ன் கோல் ஃபீல்ட்ஸ் (ECL) நிறுவனத்தின் குத்தகைப் பகுதிகளில் இருந்து நிலக்கரியை சட்டவிரோதமாக அகற்றி, புருலியா, பங்குரா மற்றும் பர்தமான் பகுதிகளில் உள்ள பல தொழிற்சாலைகளுக்கு வழங்கியதாக தெரியவந்தது.
இந்த சட்டவிரோதமாக கடத்தப்பட்ட நிலக்கரியை ஷகாம்பரி குழுமம் வாங்கி சேமித்ததும், அதன் மூலம் கிடைத்த ஹவாலா வழி பணம், ஐ-பேக் நிறுவனத்திற்கு எளிதாக மாற்றப்பட்டதும் விசாரணையில் முக்கிய திருப்பமாக அமைந்தது. இதன் தொடர்ச்சியாக, ஐ-பேக் நிறுவனத்தை விசாரணை வட்டத்திற்குள் கொண்டுவந்த அமலாக்கத்துறை, தலைமறைவாக உள்ள திரிணாமுல் இளைஞர் அணித் தலைவர் வினய் மிஸ்ரா மற்றும் அவரது சகோதரர் விகாஸ் ஆகியோருக்கு சொந்தமான நிறுவனங்களின் வழியாகவும் பணப்பரிவர்த்தனைகள் நடந்துள்ளதை கண்டுபிடித்தது.
இந்த தகவல்களின் அடிப்படையில், கொல்கத்தாவில் உள்ள ஐ-பேக் அலுவலகத்திலும், பிரதிக் ஜெயின் இல்லத்திலும் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இந்தச் சோதனையின் போது மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி நேரடியாக தலையிட்டதாக கூறப்படுவது, வழக்கின் போக்கை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.
பொதுவாக, பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (PMLA) பிரிவு 17ன் கீழ், அமலாக்கத்துறைக்கு சோதனை நடத்தவும், சந்தேகத்திற்கிடமான ஆவணங்கள், பதிவுகள் மற்றும் சொத்துகளை பறிமுதல் செய்யவும் முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்தச் சட்டத்தின் படி, சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் எந்தவொரு இடத்திலும் அமலாக்கத்துறை நுழைந்து சோதனை மேற்கொள்ளலாம்.
மேலும், சட்டப்படி நடைபெறும் சோதனையின் போது, தேடுதல் அதிகாரியின் அனுமதி அல்லது நீதிமன்ற உத்தரவு இன்றி, அரசியலமைப்பு பதவியில் உள்ளவர் உட்பட யாரும் ஆவணங்கள் அல்லது மின்னணு சாதனங்களை அகற்ற முடியாது என்பதையும் சட்டம் தெளிவாக குறிப்பிடுகிறது.
இந்தச் சூழலில், சோதனை நேரத்தில் மம்தா பானர்ஜி மற்றும் அவருடன் இருந்தவர்கள் எடுத்துச் சென்றதாக கூறப்படும் ஆவணங்கள், ஏற்கனவே அமலாக்கத்துறை பறிமுதல் செய்த பட்டியலில் இருந்ததா, அல்லது அதிகாரப்பூர்வமாக பட்டியலிடப்படாதவையா என்பதே இந்த விவகாரத்தின் மையமாகக் கருதப்படுகிறது.
பணமோசடி தடுப்புச் சட்டத்தின் பிரிவு 17ன் கீழ், அமலாக்கத்துறை தனது அதிகாரங்களை முறையாக பயன்படுத்தியதா என்பதையும், ஆவணங்கள் அகற்றப்பட்டதாக கூறப்படுவது ஆதாரங்களின் பாதுகாப்புச் சங்கிலியை (chain of custody) பாதித்ததா என்பதையும் உயர்நீதிமன்றம் ஆராய வாய்ப்புள்ளது. சட்டபூர்வமான சோதனையின் போது ஆதாரங்கள் வெளியே கொண்டு செல்லப்பட்டதாக நிரூபிக்கப்பட்டால், அது அமலாக்கத்துறையின் வழக்கை மேலும் வலுப்படுத்தும்.
அதே நேரத்தில், அந்த ஆவணங்கள் விசாரணை எல்லைக்கு உட்படாதவை என நிரூபிக்கப்பட்டால், முதலமைச்சரின் தரப்பு வாதத்திற்கு சட்ட ரீதியான ஆதாரம் கிடைக்கக்கூடும். நீதிமன்றம் குற்றவியல் பொறுப்பை உறுதி செய்தால், பணமோசடி தடுப்புச் சட்டத்தின் பிரிவு 17, 63 மற்றும் 70 ஆகியவை அமலுக்கு வர வாய்ப்புள்ளது.
இதனுடன், பாரதிய நியாய சன்ஹிதையின் கீழ், அரசு ஊழியரை பொது கடமைகளை செய்ய விடாமல் தடுத்தல், பொது அதிகாரிக்கு எதிராக தாக்குதல் அல்லது குற்றவியல் பலவந்தம் மேற்கொள்ளல், விசாரணைக்கு தேவையான ஆவணங்களை அழித்தல் அல்லது மறைத்தல் போன்ற பிரிவுகளும் பொருந்தக்கூடும்.
அமலாக்கத்துறையின் ஐ-பேக் தொடர்பான சோதனையின் போது மம்தா பானர்ஜி சட்ட வரம்பை மீறினாரா? இது அரசியல் எதிர்ப்பின் வெளிப்பாடா அல்லது சட்ட நடவடிக்கைகளுக்கு ஏற்பட்ட தடையா? இந்தக் கேள்விகளுக்கான தெளிவான பதில், வரும் நீதிமன்ற விசாரணைகளில் வெளிப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.