கடன் சுமையில் தத்தளிக்கும் பாகிஸ்தான் – சவுதி கடனுக்குப் பதிலாக JF-17 போர் விமான ஒப்பந்தம் முன்மொழிவு
சவுதி அரேபியாவிடமிருந்து பெற்ற கடனைத் திருப்பிச் செலுத்த இயலாத கடுமையான நிலைக்கு பாகிஸ்தான் தள்ளப்பட்டுள்ளது. இந்தச் சூழலில், பணமாகக் கடனை அடைப்பதற்குப் பதிலாக, போர் விமான ஒப்பந்தங்களை வழங்குவது குறித்து சவுதி அரேபியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாகிஸ்தான் தீவிரமான பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருப்பது உலக நாடுகளுக்கே தெரிந்த ஒன்றாகும். குறைந்த வட்டியில் கடன் வழங்கும் நாடுகளில் சவுதி அரேபியா முக்கிய இடம் வகிக்கிறது. இதேபோல் உலக வங்கி, சீனா, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட பல நாடுகளிடமிருந்தும் பாகிஸ்தான் பெரும் அளவில் கடன் பெற்றுள்ளது. இருப்பினும், உள்நாட்டு உற்பத்தியை உயர்த்த முடியாததால், வாங்கிய கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியாத நிலை தொடர்ந்து நீடித்து வருகிறது.
வேளாண்மை மற்றும் தொழில் வளர்ச்சியில் பின்னடைவு, நிர்வாகத்தில் ஊழல், தொடர்ச்சியான பயங்கரவாத தாக்குதல்கள், உள்நாட்டு கலவரங்கள் போன்ற பல காரணங்களால் பாகிஸ்தானின் பொருளாதாரம் மீண்டும் எழுவதற்கான வாய்ப்பு மங்கியுள்ளதாக பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். இத்தகைய சூழலில், ஆண்டுதோறும் குறைந்த வட்டியில் கடன் வழங்கி சவுதி அரேபியா பாகிஸ்தானுக்கு தற்காலிக நிவாரணம் அளித்து வருகிறது.
தற்போது பாகிஸ்தானின் மொத்த கடன் சுமை 12 பில்லியன் டாலரை (இந்திய மதிப்பில் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல்) தாண்டியுள்ள நிலையில், அதைச் செலுத்தும் திறன் அந்நாட்டிற்கு இல்லை என்பதே நிலவரமாக உள்ளது. இதனை உணர்ந்த சவுதி அரேபியா, கடன் திருப்பிச் செலுத்த வேண்டிய கால அவகாசத்தை தொடர்ந்து நீட்டித்து வருகிறது.
இந்தப் பின்னணியில், சவுதி அரேபியாவிடம் செலுத்த வேண்டிய 2 பில்லியன் டாலர் கடனுக்குப் பதிலாக, சீனாவின் ஒத்துழைப்புடன் தயாரிக்கப்பட்ட JF-17 தண்டர் ரக போர் விமானங்களை வழங்க பாகிஸ்தான் முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான பேச்சுவார்த்தைகள் இருநாடுகளுக்கும் இடையே நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஆண்டு பாகிஸ்தான் மற்றும் சவுதி அரேபியா இடையே ராணுவ ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது. ‘இஸ்லாமிக் நேட்டோ’ என அழைக்கப்படும் இந்த உடன்பாட்டின் படி, சவுதி அரேபியாவுக்கு எதிரான தாக்குதல், பாகிஸ்தானுக்கு எதிரான தாக்குதலாகவும், பாகிஸ்தானுக்கு எதிரான தாக்குதல் சவுதிக்கு எதிரானதாகவும் கருதப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ராணுவ உறவை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், சுமார் 4 பில்லியன் டாலர் மதிப்பிலான JF-17 போர் விமான ஒப்பந்தத்தை சவுதி அரேபியாவுடன் மேற்கொள்ள பாகிஸ்தான் ஆர்வம் காட்டி வருகிறது. இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்தால், அதில் 2 பில்லியன் டாலர் சவுதி கடனுக்கான ஈடாக கணக்கிடப்படும் என்றும், மீதமுள்ள தொகை ஆயுதங்கள், மின்னணு உதிரிப்பாகங்கள், விமானிகளுக்கான பயிற்சி உள்ளிட்ட தேவைகளுக்குப் பயன்படுத்தப்படும் என்றும் கூறப்படுகிறது.
பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தான சில மாதங்களிலேயே இந்த பேச்சுவார்த்தை நடைபெறுவது, பாகிஸ்தான்–சவுதி ராணுவ உறவு மேலும் ஆழமடைந்துள்ளதாகக் கருதப்படுகிறது.
இதற்கிடையே, அமெரிக்காவிடம் இருந்து F-35 போன்ற மேம்பட்ட போர் விமானங்களை வாங்க சவுதி அரேபியா முன்பே ஆர்வம் காட்டியிருந்தது. ஆனால், இஸ்ரேலின் எதிர்ப்பால் அந்த முயற்சி தடைபட்டதாக கூறப்படுகிறது. மேற்கத்திய விமானங்களுடன் ஒப்பிடும்போது, குறைந்த விலை மற்றும் எளிய பராமரிப்பு காரணமாக JF-17 விமானங்கள் மீது பல நாடுகளின் கவனம் அதிகரித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், JF-17 போர் விமானங்களை விற்பனை செய்வது குறித்து பாகிஸ்தான் வங்கதேசத்துடனும் ஆலோசனை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கதாக பார்க்கப்படுகிறது.