“ஷக்ஸ்காம்” இந்தியாவின் உரிமைப் பகுதி – சீனா–பாகிஸ்தான் CPEC திட்டத்திற்கு இந்தியா கடும் மறுப்பு | சிறப்பு தொகுப்பு
சீனா–பாகிஸ்தான் பொருளாதார வழித்தடம் (CPEC), இந்தியாவின் பிரிக்க முடியாத நிலப்பரப்பை ஊடறுத்துச் செல்லும் எந்த முயற்சியும் ஏற்றுக்கொள்ள முடியாதது என இந்திய வெளியுறவுத்துறை உறுதியாக தெரிவித்துள்ளது. மேலும், சீனா மற்றும் பாகிஸ்தான் இடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் சட்டபூர்வமானதல்ல என்றும் இந்தியா தெளிவுபடுத்தியுள்ளது. இந்த விவகாரத்தின் பின்னணி என்ன? விரிவாகப் பார்ப்போம்.
லடாக்கின் வடபகுதியில், சியாச்சின் பனிப்பாறைக்கு அப்பால் அமைந்துள்ள மலைச்சரிவுப் பகுதி தான் ஷக்ஸ்காம் பள்ளத்தாக்கு (Shaksgam Valley). 1963ஆம் ஆண்டு, சீனா மற்றும் பாகிஸ்தான் இடையே கையெழுத்தான ஒப்பந்தத்தின் மூலம், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீரின் ஒரு பகுதியாகிய இந்த ஷக்ஸ்காம் பள்ளத்தாக்கு, சீனாவுக்கு ஒப்படைக்கப்பட்டது.
இந்த ஒப்பந்தத்தை இந்தியா தொடக்கம் முதலே ஏற்றுக்கொள்ளவில்லை. மாறாக, ஷக்ஸ்காம் பள்ளத்தாக்கு முழுமையாக இந்தியாவின் உரிமைப் பகுதியாகும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
சின்ஜியாங் மாகாணத்தையும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரையும் இணைக்கும் முக்கிய நிலப்பரப்பாக ஷக்ஸ்காம் பள்ளத்தாக்கு இருப்பதால், இது இந்தியா–சீனா இடையிலான எல்லைச் சர்ச்சையின் முக்கிய மையமாகவும் கருதப்படுகிறது.
சமீப காலமாக சீனா இந்தப் பகுதியில் சாலைகள் உள்ளிட்ட கட்டமைப்புகளை உருவாக்கி வருவதால், ஷக்ஸ்காம் பள்ளத்தாக்கு வழியாக CPEC திட்டத்தை விரிவுபடுத்தும் முயற்சிகளுக்கு இந்தியா கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளது.
இது தொடர்பாக ஊடகங்களுக்கு பேசிய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், ஷக்ஸ்காம் பள்ளத்தாக்கு இந்தியாவின் ஒரு அங்கம் என்பதைக் மீண்டும் உறுதிப்படுத்தினார். 1963ஆம் ஆண்டு கையெழுத்தான சீனா–பாகிஸ்தான் எல்லை ஒப்பந்தத்தை இந்தியா ஒருபோதும் அங்கீகரிக்காது என்றும், அது சட்டரீதியாக செல்லாதது என்றும் அவர் கூறினார்.
மேலும், ஜம்மு–காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்கள் இந்தியாவின் ஒருங்கிணைந்த, பிரிக்க முடியாத பகுதிகள் என்பதையும், இது சீனா மற்றும் பாகிஸ்தான் அதிகாரிகளுக்கு பலமுறை தெளிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளதாகவும் வெளியுறவுத்துறை விளக்கம் அளித்துள்ளது.
ஷக்ஸ்காம் பள்ளத்தாக்கில் நிலப்பரப்புச் சூழலை மாற்றும் எந்த நடவடிக்கைகளுக்கும் எதிராக இந்தியா தொடர்ந்து சீனாவிடம் தனது எதிர்ப்பை பதிவு செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.
தேசத்தின் பாதுகாப்பு மற்றும் நலன்களைப் பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க இந்தியா முழு உரிமை பெற்றுள்ளது என்றும் வெளியுறவுத்துறை வலியுறுத்தியுள்ளது.
குறிப்பாக, இந்திய ராணுவத்திற்கு மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த சியாச்சின் பனிப்பாறைக்கு வடக்கே அமைந்துள்ள ஷக்ஸ்காம் பகுதியில், சீனா அனைத்து காலநிலைகளிலும் பயன்படுத்தக் கூடிய நீண்ட சாலையை தீவிரமாக அமைத்து வருகிறது. சுமார் 10 மீட்டர் அகலமுள்ள இந்தச் சாலை, 75 கிலோமீட்டர் தூரத்திற்கு ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளதாகவும், கட்டுமானப் பணிகள் வேகமாக நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த சூழ்நிலையில், சீனா–பாகிஸ்தான் நடவடிக்கைகளுக்கு எதிராக இந்தியா தன் உறுதியான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது.