நீரஜ் சோப்ராவுக்கு இந்திய ராணுவத்தில் கவுரவ லெப்டினன்ட் கர்னல் பதவி
ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ராவுக்கு இந்திய ராணுவத்தில் கவுரவ லெப்டினன்ட் கர்னல் பதவி வழங்கப்பட்டது.
டெல்லியில் நேற்று நடந்த விழாவில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ராணுவத் தலைமை தளபதி உபேந்திர திவேதி மற்றும் மூத்த அதிகாரிகள் கலந்துகொண்டனர். நீரஜ் சோப்ரா கடந்த 2016-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 26-ம் தேதி இந்திய ராணுவத்தில் நயிப் சுபேதாரராக சேர்ந்தார். அதன் பின்பு, 2021-ஆம் ஆண்டு சுபேதாரா, 2022-ஆம் ஆண்டு சுபேதார் மேஜர் பதவிகளுக்கு உயர்ந்தார்.
1997-ஆம் ஆண்டு டிசம்பர் 24-ம் தேதி ஹரியானாவின் பானிப்பட்டில் உள்ள காந்த்ரா கிராமத்தில் பிறந்த நீரஜ் சோப்ரா, 2020-ஆம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆண்கள் ஈட்டி எறிதலில் தங்கப் பதக்கம் வென்றார்.
அதனை தொடர்ந்து, 2024-ஆம் ஆண்டு பாரிஸ் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் பெற்றார். முன்பாக, 2023-ஆம் ஆண்டு உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். மேலும், ஆசிய விளையாட்டு, காமன்வெல்த் விளையாட்டு மற்றும் டயமண்ட் லீக் தொடர்களில் நீரஜ் சோப்ரா பல தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார். ஈட்டி எறிதலில் அவர் 90.23 மீட்டர் தள்ளிய சாதனை இந்திய விளையாட்டு வரலாற்றில் மைல் கல் சாதனையாகும்.
விழாவில் நீரஜ் சோப்ரா மற்றும் அவரது குடும்பத்தாருடன் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உரையாடினார். அவர் கூறியது:
“கவுரவ லெப்டினன்ட் கர்னல் நீரஜ் சோப்ரா ஒழுக்கம், அர்ப்பணிப்பு மற்றும் தேசிய பெருமையை பிரதிபலிப்பவர்; விளையாட்டு சகோதரத்துவமும், ராணுவத்தின் வரும் தலைமுறைகளுக்கும் முன்மாதிரியாகச் சேவை செய்கிறார்”