“வன்முறையை பயன்படுத்தினால் ஈரான் உச்ச தலைவரின் உயிருக்கும் ஆபத்து” – டிரம்ப் குறித்து அமெரிக்க செனட்டர் எச்சரிக்கை
ஈரானில் நடைபெற்று வரும் மக்கள் எழுச்சிகளை அடக்க அரசு வன்முறையை நாடினால், அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரானின் உச்ச தலைவரை குறிவைப்பதற்கும் தயங்கமாட்டார் என அமெரிக்க செனட்டர் லிண்ட்சே கிரஹாம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஒரு நேர்காணல் நிகழ்ச்சியில் பேசிய அவர், தன் சொந்த மக்களை அடக்குமுறையால் கொன்று, உலக நாடுகளை அச்சுறுத்தும் அயதுல்லா ஒரு தீவிர மதவாத நாசி போன்றவர் என கடுமையாக விமர்சித்தார்.
மேலும், “உதவி விரைவில் கிடைக்கும்; உங்கள் நாட்டை அயதுல்லாவின் பிடியிலிருந்து விடுவித்துக் கொள்ளுங்கள்” என்று ஈரான் மக்களுக்கு கிரஹாம் நேரடியாக அழைப்பு விடுத்தார்.
சிறந்த வாழ்க்கைக்காக போராடும் மக்களை தொடர்ந்து கொலை செய்யும் நிலை நீடித்தால், டொனால்ட் டிரம்ப் நேரடியாக நடவடிக்கை எடுத்து உச்ச தலைவரையே கொன்றுவிடுவார் எனவும் அவர் எச்சரித்தார்.
இதற்கு எடுத்துக்காட்டாக, அமெரிக்கா வெனிசுலாவிற்குள் நுழைந்து அந்நாட்டு அதிபர் மதுரோவை கைது செய்த சம்பவத்தை குறிப்பிட்ட கிரஹாம், டிரம்ப் வெறும் வார்த்தைகளில் மட்டுமே நிற்கும் நபர் அல்ல என்பதை ஈரான் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.