வேதாந்தா குழும சொத்துகளில் 75%க்கும் அதிகம் சமூக நலத்துக்கே – அனில் அகர்வால் அறிவிப்பு
வேதாந்தா குழுமத்தின் மொத்த சொத்துகளில் 75 சதவீதத்துக்கு மேலான பகுதியை பொதுமக்கள் நலனுக்கான திட்டங்களில் செலவிட உள்ளதாக, அந்த குழுமத்தின் நிறுவனர் அனில் அகர்வால் அறிவித்துள்ளார்.
உலகின் பல நாடுகளில் கனிம வளம் மற்றும் சுரங்கத் தொழில்களில் ஈடுபட்டு வரும் வேதாந்தா குழுமம், மும்பையை தலைமையகமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் தொழிற்சாலையை நிர்வகித்த அனில் அகர்வாலின் மூத்த மகன் அக்னிவேஷ், அமெரிக்காவில் பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டபோது ஏற்பட்ட விபத்தில் கடுமையாக காயமடைந்தார்.
அதனைத் தொடர்ந்து நியூயார்க் நகரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அக்னிவேஷ், எதிர்பாராத விதமாக ஏற்பட்ட இதயஅடைப்பால் உயிரிழந்தார்.
இந்த துயர சம்பவம் குறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்ட அனில் அகர்வால், தங்கள் குழந்தையை இறுதியாக அனுப்பி வைக்க வேண்டிய பெற்றோரின் வேதனையை வார்த்தைகளால் விவரிக்க முடியாது என்றும், மகனின் மறைவு குடும்பத்தினரை மனதளவில் சிதறடித்துவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், வேதாந்தா குழுமத்தின் வருமானத்தில் 75 சதவீதத்தை சமூக நலத்திற்காக திருப்பி வழங்குவதாக மகனிடம் வாக்குறுதி அளித்திருந்ததாக அவர் தெரிவித்துள்ளார். அந்த உறுதியை தவறாமல் நிறைவேற்றுவேன் என்றும் அனில் அகர்வால் தனது பதிவில் உறுதியாக தெரிவித்துள்ளார்.