பாஜக தேசிய செயல் தலைவர் பொறுப்புக்குப் பிறகு முதன்முறையாக தமிழகம் வருகிறார் நிதின் நபின்
பாஜக தேசிய செயல் தலைவராக பதவியேற்றதற்கு பிறகு, முதல் முறையாக தமிழ்நாட்டிற்கு வருகை தரும் நிதின் நபின், கோவையில் நடைபெறவுள்ள “ப்ரொபஷனல் கனெக்ட்” என்ற நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளதாக பாஜக தொழில்முனைவோர் பிரிவு அமைப்பாளர் சுந்தர்ராமன் தெரிவித்துள்ளார்.
கோவை நகரில் வரும் 10ஆம் தேதி, பாஜக ப்ரொபஷனல் பிரிவு சார்பில் இந்த “ப்ரொபஷனல் கனெக்ட்” நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது.
இந்த நிகழ்வில் மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி கலந்து கொள்ள இருப்பதாகவும், பாஜக ப்ரொபஷனல் பிரிவு மாநில நிர்வாகி சுந்தர்ராமன் தெரிவித்துள்ளார்.
ஒரு லட்சம் உறுப்பினர்களை இணைக்கும் இலக்குடன் பாஜக ப்ரொபஷனல் பிரிவு செயல்பட்டு வருவதாகவும், வரவிருக்கும் தேர்தல்களை கருத்தில் கொண்டு, பல்வேறு துறைகள் சந்திக்கும் சவால்கள் குறித்து ஆலோசித்து, தேர்தல் திட்டங்களை வகுப்பதே இந்த நிகழ்வின் முக்கிய நோக்கமாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.
மேலும், ஜிஎஸ்டி 2.0 தொடர்பான விழிப்புணர்வை மாணவர்கள் மற்றும் தொழில் துறையினரிடையே பரப்பியுள்ளதாகவும், அதேபோல் மத்திய பட்ஜெட்டுக்கான எதிர்பார்ப்புகள் மற்றும் பரிந்துரைகளை தொகுத்து நிதியமைச்சருக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் சுந்தர்ராமன் விளக்கினார்.