சுற்றுப்பாதையில் எரிபொருள் நிரப்பும் இந்தியாவின் முதல் செயற்கைக்கோள் – Aayu lSAT விண்ணில் ஏவத் தயார்
இந்தியாவின் முதல் சுற்றுப்பாதை எரிபொருள் நிரப்பு செயற்கைக்கோளாக உருவாக்கப்பட்டுள்ள Aayu lSAT (ஆயுள்சாட்), விரைவில் விண்வெளிக்கு அனுப்பப்பட தயாராக உள்ளது. எதிர்காலத்தில் உருவாகவுள்ள “விண்வெளி எரிபொருள் நிலையங்கள்” திட்டத்திற்கு இது ஒரு முக்கிய தொழில்நுட்ப சோதனையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதும் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட புதிய செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்படுகின்றன. குறிப்பாக தகவல் தொடர்பு தேவைகளுக்காக பல நாடுகள் தொடர்ச்சியாக செயற்கைக்கோள்களை ஏவி வருகின்றன.
காலப்போக்கில், பூமியின் சுற்றுப்பாதையில் இயங்கிய ஆயிரக்கணக்கான செயற்கைக்கோள்கள் செயலிழந்துள்ளன. மேலும், எரிபொருள் தீர்ந்து முடிவுக்கு வரும் நிலையில் உள்ள பல செயற்கைக்கோள்களும் உள்ளன. இவற்றின் ஆயுளை நீட்டிக்கும் நோக்கில், விண்வெளியிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பத்தை அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஆராய்ந்து வருகின்றன.
இந்த பின்னணியில், விண்வெளியில் தனித்துவமான எரிபொருள் நிரப்பு சேவையை நிரூபிக்கும் செயற்கைக்கோளாக Aayu lSAT-ஐ இஸ்ரோ, வரும் 12ஆம் தேதி காலை 10:17 மணிக்கு, ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள முதல் ஏவுதளத்தில் இருந்து ஏவ உள்ளது.
இந்த ஏவுதல், 2026ஆம் ஆண்டுக்கான இஸ்ரோவின் முதல் விண்வெளி பயணம் ஆகும். பிஎஸ்எல்வி-சி62 ராக்கெட், இரண்டு ஸ்ட்ராப்-ஆன் பூஸ்டர்களுடன் கூடிய டிஎல் (DL) வகையில், 64வது பிஎஸ்எல்வி பயணமாக இந்த செயற்கைக்கோளை விண்ணில் செலுத்துகிறது.
தமிழ்நாட்டைத் தலைமையிடமாகக் கொண்ட OrbitAID Aerospace என்ற ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் முதல் செயற்கைக்கோளாக Aayu lSAT விண்வெளிக்குச் செல்கிறது.
EOS-N1 என்ற முதன்மை பூமி கண்காணிப்பு செயற்கைக்கோளுடன், தொழில்நுட்ப செயல்திறனை நிரூபிக்கும் கருவிகள் உட்பட மொத்தம் 18 துணை செயற்கைக்கோள்களையும் ஒரே பயணத்தில் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழில் “வாழ்நாள்” என்ற பொருளை உடைய Aayu என்ற பெயருக்கு ஏற்ப, இந்த செயற்கைக்கோள் நீண்டகால செயல்பாட்டை நோக்கமாகக் கொண்ட ஒரு திட்டமாக உருவாக்கப்பட்டுள்ளது.
25 கிலோ எடையுடைய இந்த செயற்கைக்கோள், சுற்றுப்பாதையில் உள்ள மற்ற செயற்கைக்கோள்களுக்கு எரிபொருள் நிரப்புதல் மற்றும் அவற்றின் செயல்பாட்டு காலத்தை நீட்டிக்கும் அதிநவீன தொழில்நுட்பங்களை நிரூபிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பூமியிலிருந்து சுமார் 800 கிலோமீட்டர் உயரத்தில் உள்ள சூரிய ஒத்திசைவு சுற்றுப்பாதையில் (Sun-Synchronous Orbit) Aayu lSAT நிலைநிறுத்தப்படும். இது எதிர்கால விண்வெளி எரிபொருள் சேமிப்பு மற்றும் விநியோக நிலையங்களுக்கான அடித்தள சோதனையாக செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பூமியின் சுற்றுப்பாதையில் எரிபொருள் சேமிப்பு மையங்கள் அமைப்பது என்பது ஒரு புரட்சிகரமான கருத்தாகும். இத்தகைய மையங்கள், செயற்கைக்கோள்கள் மற்றும் விண்கலங்களுக்கு விண்வெளியிலேயே எரிபொருள் வழங்கும் வசதியை உருவாக்கும்.
இதன் மூலம் பல்வேறு விண்வெளித் திட்டங்களின் செயல்பாட்டு காலம் நீட்டிக்கப்படும், விண்வெளி குப்பைகள் குறைக்கப்படும், மேலும் நீடித்த மற்றும் நிலையான விண்வெளி ஆய்வுகள் சாத்தியமாகும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
Aayu lSAT என்பது எதிர்கால விண்வெளிப் பொருளாதாரத்தின் அடித்தளம் என OrbitAID Aerospace நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி சக்திக்குமார் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
சுற்றுப்பாதை சேவைகள் மற்றும் எரிபொருள் நிரப்பும் (OOSR – On-Orbit Servicing & Refueling) தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதற்காக, OrbitAID Aerospace நிறுவனம் 2 மில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிக முதலீட்டில், பெங்களூரில் 6,500 சதுர அடி பரப்பளவில் ஒரு நவீன ஆராய்ச்சி மையத்தை அமைத்துள்ளது.
இஸ்ரோ தலைவர் வி. நாராயணன் திறந்து வைத்த இந்த மையத்தில்,
▪️ Rendezvous, Proximity Operations & Docking (RPOD) கட்டுப்பாட்டு அறை
▪️ செயற்கைக்கோள் ஒருங்கிணைப்புக்கான எரிபொருள் பரிமாற்ற அமைப்புகள்
▪️ பல்வேறு மேம்பட்ட ஆய்வுக்கூடங்கள்
உள்ளன.
இந்த அமைப்பு, இந்தியாவில் உள்ள மிகப்பெரிய வணிக ரீதியான RPOD உள்கட்டமைப்பாக கருதப்படுகிறது.
முன்னதாக, காமன்வெல்த் அமைப்பின் கீழ் வழங்கப்பட்ட இந்தோ–ஆஸ்திரேலிய MAITRI விண்வெளி மானியம் மூலம் OrbitAID Aerospace ஒரு முக்கிய ஒப்பந்தத்தை பெற்றுள்ளது. அதன் மூலம், இந்தியாவின் முதல் Standard Interface for Docking & Refueling Port அமைக்கும் உரிமையும் வழங்கப்பட்டுள்ளது.
இது இந்தியாவில் உருவாக்கப்பட்ட டாக்கிங் மற்றும் எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பத்தின் முதல் வணிகப் பயன்பாடு என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு, இஸ்ரோவின் SPADeX திட்டத்தின் கீழ், விண்வெளியில் இரண்டு செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக இணைத்தது இந்தியாவின் முக்கிய சாதனையாக அமைந்தது.
மேலும், 2027ஆம் ஆண்டுக்குள், சுற்றுப்பாதையில் செயல்படும் எரிபொருள் நிலையங்களாக பயன்படும் டேங்கர் செயற்கைக்கோள்களின் தொகுப்பை, இஸ்ரோவுடன் இணைந்து OrbitAID Aerospace உருவாக்கி வருகிறது.