இந்திய கடற்படை வலிமையை உயர்த்தும் மத்திய அரசின் நடவடிக்கைகள்
நடப்பு ஆண்டில் இந்திய கடற்படையில் 19 புதிய போர்க்கப்பல்கள் சேர்க்கப்பட உள்ளதாக கடற்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
நாட்டின் பாதுகாப்பு சூழலில் தொடர்ந்து உருவாகும் சவால்களை மனதில் கொண்டு, இந்திய கடற்படையின் திறன் மற்றும் வலிமையை மேம்படுத்த மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அந்த முயற்சியின் ஒரு பகுதியாக, இந்தியாவின் பாதுகாப்பு ஆற்றலை உலக அளவில் வெளிப்படுத்தும் வகையில், சுமார் 3,500 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளை துல்லியமாக தாக்கும் கே-4 வகை பாலிஸ்டிக் ஏவுகணை சமீபத்தில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.
இதே தொடர்ச்சியாக, இந்த ஆண்டுக்குள் 19 போர் கப்பல்களை கடற்படை சேவையில் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக இந்திய கடற்படை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இதுகுறித்து விளக்கம் அளித்த கடற்படை தரப்பு, 2026ஆம் ஆண்டு கடற்படை விரிவாக்கத்தின் முக்கியமான கட்டமாக அமையும் என தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக, இதற்கு முன்பு இல்லாத அளவிற்கு கடற்படை கப்பல் தயாரிப்பு வேகம் அதிகரித்துள்ளதாகவும், இந்தியாவின் உள்நாட்டு கப்பல் கட்டுமானத் துறையின் வளர்ச்சியையும் முதிர்ச்சியையும் இது வெளிப்படுத்துகிறது என பாதுகாப்பு ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
முன்னதாக, ஒரு போர் கப்பலை உருவாக்க 8 முதல் 9 ஆண்டுகள் வரை எடுத்துக் கொண்ட நிலையில், தற்போது மத்திய அரசின் முயற்சிகளால் சுமார் 6 ஆண்டுகளிலேயே ஒரு கடற்படை கப்பல் தயாரிக்கப்படுவது குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.