இந்திய தயாரிப்புகளுக்கு 500% இறக்குமதி வரி விதிக்கும் அபாயம்
இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு 500 சதவீதம் வரை இறக்குமதி சுங்கம் விதிக்க வழிவகுக்கும் மசோதாவிற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து அமெரிக்க செனட்டர் லிண்ட்சே கிரஹாம் தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பதிவில், நீண்டகால ஆலோசனைகளுக்குப் பிறகு ரஷ்யாவை குறிவைக்கும் பொருளாதார தடைகள் தொடர்பான சட்ட முன்மொழிவுக்கு ஜனாதிபதி ட்ரம்ப் ஆதரவு தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் வகையில் இந்த மசோதா தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், சில நாடுகள் ரஷ்ய எண்ணெய் வாங்குவது உக்ரைன் மீது நடைபெறும் போருக்கு ஊக்கமளிப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், சீனா, இந்தியா, பிரேசில் உள்ளிட்ட நாடுகள் ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதைத் தடுக்கவே இந்த சட்ட முன்மொழிவின் முக்கிய நோக்கம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த மசோதாவுக்கு அமெரிக்க அதிபரின் ஒப்புதல் கிடைத்துள்ளதால், இந்தியப் பொருட்களுக்கு அமெரிக்கா 500 சதவீதம் வரை இறக்குமதி வரி விதிக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.