புதுச்சேரி காவல் கண்காணிப்பாளர் மீது பாலியல் புகார் – பெண் காவலரிடம் நீண்ட நேர விசாரணை
புதுச்சேரி காவல் கண்காணிப்பாளர் மீது எழுந்துள்ள பாலியல் தொந்தரவு குற்றச்சாட்டு தொடர்பாக, பாதிக்கப்பட்ட பெண் காவலரிடம் 10 மணி நேரத்திற்கும் அதிகமாக விசாரணை நடத்தப்பட்டது.
புதுச்சேரி காரைக்கால் காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் பெண் காவலருக்கு, அந்த காவல் நிலையத்தில் முன்பு எஸ்பியாக பணியாற்றிய சுப்பிரமணி என்பவர் தொடர்ந்து பாலியல் ரீதியான தொந்தரவு வழங்கியதாக புகார் எழுந்துள்ளது.
பின்னர் அவர் புதுச்சேரிக்கு பணிமாறுதல் பெற்றதற்குப் பிறகும், அந்த பெண் காவலருக்கு குறுஞ்செய்திகள் அனுப்பி மனரீதியான துன்புறுத்தலை தொடர்ந்ததாக கூறப்படுகிறது.
இந்த விவகாரம் காரணமாக, பெண் காவலரும் அவரது கணவரும் இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டதாகவும், அதன் விளைவாக மனமுடைந்த அந்த பெண் காவலர் பினாயிலை குடித்து தற்கொலை முயற்சி மேற்கொண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதனைத் தொடர்ந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் வீடு திரும்பிய நிலையில்,
தனது மகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த எஸ்பி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி, பெண் காவலரின் தாய் புதுச்சேரி டிஜிபி அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.
இதையடுத்து, பெண் மூத்த காவல் கண்காணிப்பாளர் நித்யா ராதாகிருஷ்ணன்,
பெண் காவல் கண்காணிப்பாளர் ரட்சனா சிங்,
மற்றும் சமூக அமைப்புகளைச் சேர்ந்த பெண்கள் அடங்கிய உள்புகார் விசாரணைக் குழு அமைக்கப்பட்டது.
இந்த குழு விசாரணை நடத்த வேண்டும் என டிஜிபி உத்தரவிட்டார்.
அந்த உத்தரவின் பேரில், விசாரணைக் குழுவினர் பெண் காவலரிடம் தொடர்ந்து 10 மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையின் போது, முக்கிய ஆதாரங்களை பெண் காவலர் குழுவிடம் ஒப்படைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.