பெண்களுக்கான ஆன்லைன் ‘ஜிகாதி’ பாடநெறி: ஜெய்ஷ்-இ-முகம்மது அமைப்பு புதிய முயற்சி
தீவிரவாத அமைப்பு ஜெய்ஷ்-இ-முகம்மது பெண்களுக்கான ஆன்லைன் ஜிகாதி பாடநெறியை அறிமுகப்படுத்தியுள்ளது.
காஷ்மீரை இந்தியாவிலிருந்து பிரித்து பாகிஸ்தானுடன் இணைப்பதே நோக்கமாகக் கொண்டு, 2000ஆம் ஆண்டு மவுலானா மசூத் அசார் நிறுவிய இந்த அமைப்பு, இந்தியாவுக்கு எதிரான பல்வேறு பயங்கரவாதத் தாக்குதல்களில் ஈடுபட்டுள்ளது. 2001ஆம் ஆண்டு நாடாளுமன்ற தாக்குதல் மற்றும் 2019 புல்வாமா தாக்குதல் ஆகியவை அவற்றில் குறிப்பிடத்தக்கவை.
இவ்வமைப்பு இந்தியா மட்டுமல்லாமல் அமெரிக்கா, இங்கிலாந்து, ஐ.நா. ஆகியவற்றாலும் தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்பாகும்.
பாகிஸ்தானை தளமாகக் கொண்டு இயங்கும் ஜெய்ஷ்-இ-முகம்மது, இம்மாதத்தின் தொடக்கத்தில் ‘ஜமாத்-உல்-முமினாத்’ என்ற பெயரில் மகளிர் பிரிவை உருவாக்கியது. இதைத் தொடர்ந்து, ‘துஃபத்-அல்-முமினாத்’ என்ற பெயரில் பெண்களுக்கான ஆன்லைன் ஜிகாதி பாடநெறி தொடங்கப்படவுள்ளது.
🔸 பாடநெறி விவரங்கள்
- சேர்க்கை தொடக்கம்: நவம்பர் 8
- நேரம்: தினமும் 40 நிமிடங்கள்
- கட்டணம்: 500 பாகிஸ்தானிய ரூபாய் (இந்திய மதிப்பில் சுமார் ₹156)
- பயிற்சியாளர்கள்: மசூத் அசாரின் சகோதரிகள் சாதியா அசார் மற்றும் சமைரா அசார்
- பொறுப்பாளர்: சாதியா அசார்
இந்த வகுப்புகள், பெண்களை ‘ஜமாத் உல்-முமினாத்’ அமைப்பில் இணைவதற்கு ஊக்குவிப்பதற்காக வடிவமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக, மசூத் அசார் மற்றும் அவரது தளபதிகளின் குடும்பப் பெண்கள், ஜிகாத் மற்றும் இஸ்லாமிய கடமைகள் குறித்த பாடங்களை கற்பிக்க உள்ளனர் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.