மாணவர் சேர்க்கையில் பாகுபாடு குற்றச்சாட்டு – ஜம்முவில் உள்ள மருத்துவக் கல்லூரியின் அங்கீகாரம் ரத்து
மாணவர் சேர்க்கையில் ஒரு குறிப்பிட்ட சமூகத்துக்கு அதிக முன்னுரிமை வழங்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து, ஜம்முவில் செயல்பட்டு வந்த ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி மருத்துவக் கல்லூரியின் அங்கீகாரத்தை தேசிய மருத்துவ ஆணையம் ரத்து செய்துள்ளது.
ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தின் ரியாசி மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த மருத்துவக் கல்லூரி, ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கோயில் நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. நடப்பு கல்வியாண்டில் முதன்முறையாக மாணவர் சேர்க்கை தொடங்கிய இந்தக் கல்லூரிக்கு, மொத்தமாக 50 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன.
ஆனால் அந்த இடங்களில் 42 இடங்கள் முஸ்லிம் மாணவர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது நடைமுறையில் உள்ள விதிமுறைகளுக்கும், சமூக சமநிலைக்கும் எதிரானது என இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன.
இதனையடுத்து, சம்பந்தப்பட்ட அமைப்புகளைச் சேர்ந்த பிரதிநிதிகள், ஜம்மு – காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹாவை நேரில் சந்தித்து புகார் மனு அளித்தனர்.
புகார்களை பரிசீலித்த தேசிய மருத்துவ ஆணையம், கல்லூரி நிர்வாகம் விதிமுறைகளை முறையாக பின்பற்றவில்லை எனக் கூறி, அந்த மருத்துவக் கல்லூரியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய உத்தரவிட்டது.
மேலும், தற்போது அங்கு பயின்று வரும் மாணவர்களை, பிற அங்கீகாரம் பெற்ற மருத்துவக் கல்லூரிகளுக்கு இடமாற்றம் செய்யவும் தேசிய மருத்துவ ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.