சைகை மொழியில் திருக்குறள் காணொலி – தர்மேந்திர பிரதான் வெளியீடு
இந்தியாவின் செழுமையான மொழி மரபுகளைப் பாதுகாக்கும் நோக்கில், தமிழ் உட்பட ஐந்து மொழிகளில் தயாரிக்கப்பட்ட 55 இலக்கியப் படைப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
மைசூரில் செயல்படும் இந்திய மொழிகள் மத்திய நிறுவனம் மற்றும் சென்னையில் இயங்கும் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் ஆகியவை இணைந்து, தமிழ், ஒடியா, மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய செம்மொழிகளில் இந்த இலக்கியத் தொகுப்புகளை உருவாக்கியுள்ளன.
இதில் குறிப்பிடத்தக்க அம்சமாக, திருக்குறள் சைகை மொழியில் காணொளியாகவும் நூல் வடிவிலும் வெளியிடப்பட்டுள்ளது. இது மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு திருக்குறளின் கருத்துகளை எளிமையாக எடுத்துச் செல்லும் ஒரு முன்மாதிரி முயற்சியாக கருதப்படுகிறது.
இந்த இலக்கிய வெளியீடுகளை டெல்லியில் அறிமுகப்படுத்திய மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், இந்திய மொழிகளில் கல்வியை மேம்படுத்தும் தேசிய கல்விக் கொள்கையின் ஒரு அங்கமாக இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விளக்கினார்.