செனாப் நதியில் அணை கட்டும் திட்டங்கள் தீவிரம் – 2028க்குள் பணிகள் முடிவடையும் என கணிப்பு
ஜம்மு–காஷ்மீர் பகுதிகளை கடந்து பாகிஸ்தானுக்குள் செல்லும் செனாப் நதியின் குறுக்கே அணைகள் அமைக்கும் பணிகளை மத்திய அரசு வேகப்படுத்தியுள்ளது.
பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகள் நடத்திய கோழையான தாக்குதலுக்குப் பின்னர், இந்திய அரசு பாகிஸ்தானுடன் இருந்த சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்தது.
1960ஆம் ஆண்டு இந்தியா–பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே கையெழுத்தான இந்த ஒப்பந்தம், கார்கில் போர் காலத்திலும், மும்பை தீவிரவாத தாக்குதல் நடந்தபோதும் செயல்பாட்டில் இருந்து வந்தது.
பாகிஸ்தானில் வாழும் கோடிக்கணக்கான விவசாயிகள் பாதிக்கப்படக் கூடாது என்ற மனிதாபிமான அடிப்படையில், இந்த ஒப்பந்தத்தில் தலையிடாமல் இந்திய அரசு இதுவரை தவிர்த்து வந்தது.
ஆனால் பஹல்காம் தாக்குதல் நிகழ்ந்ததைத் தொடர்ந்து, சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை முதல் முறையாக இடைநிறுத்திய மத்திய அரசு, செனாப் நதியின் குறுக்கே அணைகள் கட்டும் முடிவை எடுத்துள்ளது. அதற்கான பணிகள் தற்போது தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த அணைத் திட்டங்கள் 2028ம் ஆண்டுக்குள் நிறைவு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவை செயல்பாட்டிற்கு வந்தால், பாகிஸ்தானுக்கு செல்லும் நீரின் அளவை முழுமையாக நிர்ணயிக்கும் அதிகாரம் இந்தியாவுக்கு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.