வங்கதேசத்தில் ஹிந்து விதவை மீது கொடூர தாக்குதல் – மனித உரிமை அமைப்புகள் கடும் அதிர்ச்சி
வங்கதேசத்தில் ஹிந்து சமூகத்தினருக்கு எதிரான தாக்குதல்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் சூழலில், ஜெனைதா மாவட்டத்தில் ஹிந்து விதவைப் பெண் ஒருவருக்கு எதிராக நடந்த அருவருப்பான தாக்குதல் சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
ஜெனைதா மாவட்டம் காளிகஞ்ச் பகுதியில் வசித்து வரும் சுமார் 40 வயதுடைய ஹிந்து விதவைப் பெண்ணை, கடந்த சனிக்கிழமையன்று அவரது அயலவர்களான ஹசன் மற்றும் ஷாகின் ஆகிய இருவர் வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. பின்னர், மக்கள் நடமாட்டமற்ற இடத்திற்கு அவரை கொண்டு சென்று, குழுவாக பாலியல் வன்முறை செய்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இதுமட்டுமின்றி, அந்தப் பெண்ணை ஒரு மரத்தில் கட்டிவைத்து, அவரது தலைமுடியை வெட்டி, உடல் முழுவதும் சிகரெட் தீயால் சூடு வைத்து கொடூரமான முறையில் சித்திரவதை செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால ஆட்சிக் காலத்தில், சிறுபான்மை ஹிந்து மக்களுக்கு எதிரான வன்முறை, அத்துமீறல் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக மனித உரிமை செயற்பாட்டாளர்கள் கடும் கவலை தெரிவித்துள்ளனர்.