எரிவாயு கிணற்றில் தீ விபத்து – 3 கிராமங்களைச் சேர்ந்த 300 குடும்பங்கள் பாதுகாப்பாக வெளியேற்றம்
ஆந்திரப் பிரதேசத்தின் மல்கிபுரம் பகுதியில் அமைந்துள்ள எரிவாயு கிணற்றில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தால், அருகிலுள்ள மூன்று கிராமங்களில் வசித்த 300 குடும்பங்களை அதிகாரிகள் பாதுகாப்பு காரணமாக இடம்பெயரச் செய்துள்ளனர்.
அம்பேத்கர் கோனசீமா மாவட்டத்திற்குட்பட்ட இருசு மண்டா கிராமத்தில், ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கு சொந்தமான எண்ணெய் மற்றும் எரிவாயு கிணறு இயங்கி வருகிறது. இந்தக் கிணற்றில் இருந்து எரிவாயு மற்றும் எண்ணெய் எடுக்கும் பணிகள் நடைபெற்று வந்தபோது, திடீரென ஏற்பட்ட கசிவால் தீப்பற்றல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
தகவலறிந்ததும் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை வீரர்கள், ஓஎன்ஜிசி ஊழியர்களுடன் இணைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும், கிணற்றில் இருந்து தொடர்ச்சியாக அதிக அளவில் எரிவாயு வெளியேறியதால் தீயைக் கட்டுப்படுத்த முடியாமல் அவர்கள் கடும் சிரமம் எதிர்கொண்டனர்.
20 மணி நேரத்துக்கும் மேலாக எரிந்து கொண்டிருக்கும் தீயை உடனடியாக கட்டுக்குள் கொண்டு வர தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆந்திர முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
ஆனால் தீ இன்னும் முழுமையாக அணைக்கப்படாத நிலையில், கிணற்றை முற்றிலும் மூடும் பணிகளில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இருசு மண்டா உள்ளிட்ட சுற்றுவட்டார மூன்று கிராமங்களைச் சேர்ந்த சுமார் 300 குடும்பங்களை பாதுகாப்பான இடங்களுக்கு அதிகாரிகள் இடம்பெயர்த்துள்ளனர்.