பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு ஆடம்பரம் அல்ல – அது தவிர்க்க முடியாத மூலோபாய அவசியம் : ராஜ்நாத் சிங்
பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு அடைவது ஒரு ஆடம்பர முயற்சி அல்ல; அது நாட்டின் பாதுகாப்பிற்கான அடிப்படை மூலோபாய அவசியம் என மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தினார்.
கோவா மாநிலம் சிகாலிம் பகுதியில் அமைந்துள்ள கோவா ஷிப்யார்ட் லிமிடெட் நிறுவனத்தின் சிறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், உரையாற்றும் போது, உலக அரசியல் மற்றும் பாதுகாப்பு சூழல் வேகமாக மாறி வரும் நிலையில், இந்தியா போன்ற பெரிய நாடு தனது பாதுகாப்பு தேவைகளுக்காக பிற நாடுகளின் மீது சார்ந்து இருக்க முடியாது எனத் தெரிவித்தார்.
பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்பங்களில் தன்னிறைவு அடைவது வெறும் பெருமைக்கான விஷயம் அல்ல என்றும், அது நாட்டின் நீண்டகால பாதுகாப்புத் திட்டத்தின் அத்தியாவசிய கூறு என்றும் அவர் கூறினார். இந்த இலக்கை நடைமுறையில் கொண்டு வருவதில் கோவா ஷிப்யார்ட் லிமிடெட் போன்ற பொதுத்துறை நிறுவனங்கள் முக்கிய பங்களிப்பை வழங்கி வருவதாகவும் அவர் பாராட்டினார்.
மேலும், இந்தியா தற்போது ஒரு வலுவான கடல்சார் சக்தியாக உருவாகி வருவதாகக் குறிப்பிட்ட ராஜ்நாத் சிங், இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் அமைதி, ஒத்துழைப்பு மற்றும் சர்வதேச சட்டங்களுக்கு உட்பட்ட ஒழுங்கை நிலைநிறுத்த இந்தியா தொடர்ந்து முயற்சி செய்து வருவதாகவும் தெரிவித்தார்.