எல்லைப் பகுதிகளில் சீனா அதிவேக உட்கட்டமைப்பு பணிகள் – செயற்கைக்கோள் படங்கள் வெளியீடு
எல்லை பகுதிகளில் சீனா, மிக வேகமாக உட்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கி வருவதை காட்டும் செயற்கைக்கோள் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன.
இந்தியா – சீனா உறவுகள் குறித்துப் பகுப்பாய்வு செய்துள்ள, லண்டனை தலைமையிடமாகக் கொண்டு வெளிவரும் தி எகானமிஸ்ட் இதழ், செயற்கைக்கோள் படங்களுடன் கூடிய செய்தியை வெளியிட்டுள்ளது. அதில், 2024 ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்தியா மற்றும் சீனா இடையிலான பதற்றம் ஓரளவு குறைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
குளிர்காலம் தொடங்கியுள்ள நிலையில், எல்லை கட்டுப்பாட்டு கோட்டிற்கு அருகே இருந்து முன்பு திரும்பப் பெறப்பட்ட படைகளைத் தவிர, மற்ற படைகள் தொடர்ந்து ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எல்லைச் சூழலில் பதற்றம் குறைந்திருந்தாலும், அந்தப் பகுதிகளில் சீன அரசு மறுசீரமைப்பு மற்றும் கட்டுமான நடவடிக்கைகளை வேகப்படுத்தி வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக சாலைகள், பாலங்கள், குடியிருப்பு கிராமங்கள் மற்றும் ராணுவ ஆதரவுடன் நடைபெறும் கட்டுமான பணிகளை ஒரே நேரத்தில் சீனா தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
இந்தியாவுடன் ஒப்பிடுகையில், சீனா நான்கு மடங்கு அதிக வேகத்தில் எல்லைப் பகுதிகளில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி வருவதாக தி எகானமிஸ்ட் இதழ் சுட்டிக்காட்டியுள்ளது.
இதற்கிடையில், சீன நடவடிக்கைகளுக்கு இணையாக இந்திய படைகளும் தேவையான இடங்களில் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாகவும், கடந்த காலத்தை விட தற்போது இரு நாடுகளுக்கிடையே உறவு நிலைமை சீராக உள்ளதாகவும் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.