ஜம்மு–காஷ்மீரில் செனாப் நதியை அடிப்படையாகக் கொண்ட நீர்மின் திட்டங்கள் – மத்திய அமைச்சர் நேரில் ஆய்வு
ஜம்மு–காஷ்மீர் பகுதியில் ஓடும் செனாப் நதியில் செயல்படுத்தப்பட்டு வரும் ராட்லே நீர்மின் திட்டத்தின் கட்டுமான பணிகளை, மத்திய மின்சாரத் துறை அமைச்சர் மனோகர் லால் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்குப் பின்னணியாக, சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை மத்திய அரசு ரத்து செய்தது. அதன் தொடர்ச்சியாக, ஜம்மு–காஷ்மீரில் உள்ள பஹலிகார், சலால் மற்றும் ஜீலம் நதிகளில் அமைக்கப்பட்ட அணைகளிலிருந்து பாகிஸ்தானுக்கு தண்ணீர் திறந்து விடும் நடைமுறை நிறுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, செனாப் நதியின் நீர்வளத்தை பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டங்களை மத்திய அரசு தீவிரமாக முன்னெடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, சாவல்கோட் நீர்மின் திட்டப் பணிகளை அமைச்சர் மனோகர் லால் ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு செய்தார்.
அதன்பின், கிஷ்த்வார் மாவட்டத்தில் உருவாக உள்ள 850 மெகாவாட் திறன் கொண்ட ராட்லே நீர்மின் திட்டத்தின் முன்னேற்ற நிலையும் அவர் ஆய்வு செய்தார்.
செனாப் நதி நீர் பாகிஸ்தானுக்கு செல்லும் அளவு குறைக்கப்பட்டதற்கு அந்நாடு எதிர்ப்பு தெரிவித்து வரும் சூழலில், இந்திய அரசு மின் உற்பத்தி திறனை அதிகரிப்பதோடு, எல்லையோர பகுதிகளில் அடிப்படை வசதிகள் மற்றும் உட்கட்டமைப்புகளை வலுப்படுத்தும் நடவடிக்கைகளிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.