உலகை இணைத்த பாரதத்தின் கடல்சார் மரபு – கௌண்டின்யா பாய்மரக் கப்பல் பயணம் : பழமையான கடல் வழித்தடங்களுக்கு புதிய உயிர்ப்பு

Date:

உலகை இணைத்த பாரதத்தின் கடல்சார் மரபு – கௌண்டின்யா பாய்மரக் கப்பல் பயணம் : பழமையான கடல் வழித்தடங்களுக்கு புதிய உயிர்ப்பு

தென்கிழக்கு ஆசியாவின் வரலாற்றில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தி, கடலைத் தாண்டி பயணித்து முதல் இந்து அரசாட்சியை நிறுவிய கௌண்டின்யா முனிவரின் நினைவாக, அவரது பெயரைத் தாங்கிய ஒரு பாரம்பரிய கப்பல் மீண்டும் கடலோடி தனது பயணத்தை தொடங்கியுள்ளது. இதன் பின்னணி மற்றும் முக்கியத்துவம் குறித்து இந்தச் செய்தித் தொகுப்பு விளக்குகிறது.

பண்டைய காலத்தில் இந்தியர்கள் கப்பல்களை முழுமையாக மரத்தையும் பாய்மரங்களையும் பயன்படுத்தியே உருவாக்கினர். நூற்றாண்டுகளாக மறைந்திருந்த அந்த பாரம்பரிய கப்பல் கட்டும் நுட்பத்தை, மத்திய பாதுகாப்புத் துறை இப்போது மீண்டும் உயிர்ப்பித்துள்ளது.

ஒரு காலத்தில் பரந்த பாரதத்தின் ஒரு பகுதியாக இருந்த கலிங்க தேசத்தில், முதல் நூற்றாண்டில் வாழ்ந்தவர் கௌண்டின்யா முனிவர். இந்தியாவிலிருந்து வங்கக் கடலைக் கடந்து, இன்றைய வியட்நாம்–கம்போடியா பகுதிகளுக்குச் சென்ற முதல் இந்திய கடலோடியாக அவர் கருதப்படுகிறார்.

அந்நாட்டின் அரசகுமாரியை திருமணம் செய்து, “ஃபுனான்” என்ற பெயரில் உலகின் முதல் இந்து அரசை நிறுவிய பெருமையும் கௌண்டின்யாவுக்கே உரியது.

அஜந்தா குகை ஓவியங்களில் இடம்பெற்றுள்ள கி.பி. 5-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு பண்டைய கப்பலின் வடிவமைப்பை அடிப்படையாகக் கொண்டு, இன்றைய காலத்தில் மீண்டும் உருவாக்கப்பட்டதே இந்த கௌண்டின்யா பாய்மரக் கப்பல். இதில் எங்கும் இரும்பு, ஸ்டீல் அல்லது ஆணிகள் பயன்படுத்தப்படவில்லை என்பதே இதன் தனித்தன்மை. வெல்டிங் போன்ற நவீன தொழில்நுட்பங்களும் இதில் இல்லை.

முழுமையாக இந்திய பாரம்பரியத்தை அடிப்படையாகக் கொண்ட, சுமார் 2000 ஆண்டுகள் பழமையான கப்பல் கட்டுமான முறைகளைக் கொண்டு இந்தக் கப்பல் உருவாக்கப்பட்டுள்ளது. சொல்லப்போனால், இது “கட்டப்பட்ட” கப்பல் அல்ல; “தைக்கப்பட்ட” கப்பல் எனலாம்.

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஐஎன்எஸ்வி தாரிணி போன்ற பயிற்சி மற்றும் பயணக் கப்பல்களை உள்ளடக்கிய இந்தியக் கடற்படையின் பாய்மரக் கப்பல்கள் தொகுப்பில், ஐஎன்எஸ்வி கௌண்டின்யாவும் ஒரு முக்கிய அங்கமாக அமைந்துள்ளது.

கேரளாவைச் சேர்ந்த பாரம்பரிய கைவினைஞர்கள் குழு, தலைமை கப்பல் கட்டுமான வல்லுநர் பாபு சங்கரன் தலைமையில், இந்தக் கப்பலை உருவாக்கியுள்ளது.

நவீன கப்பல்களில் இருப்பது போல் திசை நிர்ணயிக்கும் இயந்திரங்கள் இதில் இல்லை. நீண்ட துடுப்புகள் மூலம் இயக்கப்படும் இந்தக் கப்பல், சதுர வடிவ பருத்தி பாய்மரங்களை பயன்படுத்தி முன்னே செல்கிறது.

காற்றின் திசை, கடல் ஓட்டம் மற்றும் நட்சத்திரங்களின் நிலை போன்ற இயற்கை அடையாளங்களை மட்டுமே வழிகாட்டியாகக் கொண்டு, இந்தக் கப்பல் தனது பயணத்தை மேற்கொள்கிறது.

கௌண்டின்யா முனிவரின் பெயரைச் சுமந்து செல்லும் இந்தக் கப்பல், குஜராத் மாநிலம் போர்பந்தர் துறைமுகத்திலிருந்து, ஓமன் நாட்டின் மஸ்கட் நகரை நோக்கி கடந்த டிசம்பர் 29-ஆம் தேதி தனது முதல் கடல் பயணத்தை தொடங்கியது.

இந்தியாவின் செழுமையான கடல்சார் பாரம்பரியத்தை உலகிற்கு எடுத்துச் செல்லும் இந்த முயற்சியை பாராட்டிய பிரதமர் நரேந்திர மோடி, இந்த கப்பலை உருவாக்கிய வடிவமைப்பாளர்கள், கைவினைஞர்கள், கப்பல் கட்டுமானத் தொழிலாளர்கள் மற்றும் இந்திய கடற்படையினரின் அர்ப்பணிப்பை புகழ்ந்துள்ளார். மேலும், வளைகுடா நாடுகள் மற்றும் அதற்கப்பாலான பகுதிகளுடன் இந்தியாவுக்கிருந்த வரலாற்றுத் தொடர்புகளை இது மீண்டும் வலுப்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

புத்தாண்டை கடலில் கொண்டாடிய ஐஎன்எஸ்வி கௌண்டின்யா, இரும்புக் கப்பல்கள் அல்லது நவீன வழிநடத்தும் கருவிகள் உருவாகுவதற்கு முன்பே இந்திய கடலோடிகள் பயணித்த பாதைகளில் சென்று, தனது வாழ்த்துகளையும் புகைப்படங்களையும் பிரதமருக்கு அனுப்பியுள்ளது.

ஒரு காலத்தில் இந்தியாவை மேற்கு ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் தென்கிழக்கு ஆசியாவுடன் இணைத்திருந்த பண்டைய கடல்வழிகளை மீண்டும் உயிர்ப்பிக்கும் முயற்சியாகவே இந்தப் பயணம் அமைந்துள்ளது என்று இந்தியக் கடற்படை தெரிவித்துள்ளது.

உண்மையில், ஐஎன்எஸ்வி கௌண்டின்யாவின் இந்தப் பயணம், கடல்களை வென்று உலகின் பல பகுதிகளில் சென்று குடியேறி ஆட்சி செய்த பாரத முன்னோர்களுக்கு செலுத்தும் ஒரு மரியாதை அஞ்சலியாகும்.

கடலைக் கடப்பதும், தேவையெனில் போரிடுவதும், அதைவிட முக்கியமாக மக்களின் மனங்களை வெல்வதும் தான் உலகத்துடன் இந்தியா கொண்டிருந்த உறவு என்பதையே கௌண்டின்யா முனிவரின் வாழ்க்கை எடுத்துரைக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

சென்னை மயிலாப்பூரில் பெண் போக்குவரத்து காவலரை தாக்கிய மதுபோதைய இளைஞர்கள் – 4 பேர் கைது

சென்னை மயிலாப்பூரில் பெண் போக்குவரத்து காவலரை தாக்கிய மதுபோதைய இளைஞர்கள் –...

இஸ்ரோவின் ககன்யான், PSLV திட்டங்கள்: இந்திய விண்வெளித் துறைக்கு தீர்மானிக்கும் ஆண்டாக உருவாகும் 2026

இஸ்ரோவின் ககன்யான், PSLV திட்டங்கள்: இந்திய விண்வெளித் துறைக்கு தீர்மானிக்கும் ஆண்டாக...

பாங்காங் த்சோ அருகே சீன ராணுவ முகாம் – தீவிர கண்காணிப்பில் இந்தியா | சிறப்பு தொகுப்பு

பாங்காங் த்சோ அருகே சீன ராணுவ முகாம் – தீவிர கண்காணிப்பில்...

திருப்பரங்குன்றம் விவகாரம்: வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தீர்ப்பு

திருப்பரங்குன்றம் விவகாரம்: வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தீர்ப்பு திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற...