அமெரிக்காவின் கைப்பற்றலில் சிக்கிய வெனிசுலா அதிபர் – நிக்கோலஸ் மதுரோ யார்? முழு பின்னணி
வெனிசுலாவின் தற்போதைய அதிபர் நிக்கோலஸ் மதுரோவை அமெரிக்கா திடீரென கைது செய்ததாக வெளியாகிய தகவல், உலக அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், யார் இந்த நிக்கோலஸ் மதுரோ?, ஒரு சாதாரண பேருந்து ஓட்டுநராக இருந்தவர் எவ்வாறு ஒரு நாட்டின் உச்ச அதிகாரத்தை எட்டினார்? அவரை அமெரிக்கா ஏன் பிரதான எதிரியாகக் கருதுகிறது? என்பதற்கான முழு பின்னணியை இந்த சிறப்பு தொகுப்பில் பார்க்கலாம்.
பேருந்து ஓட்டுநரிலிருந்து அரசியல் பயணம்
1962 ஆம் ஆண்டு வெனிசுலாவின் தலைநகர் கராகஸில் பிறந்தவர் நிக்கோலஸ் மதுரோ. அவரது தந்தை அந்தப் பகுதியில் செயல்பட்டு வந்த தொழிற்சங்க அமைப்பின் முக்கிய பொறுப்பாளராக இருந்தார். கல்வியை முடித்த பிறகு, மதுரோ பேருந்து ஓட்டுநராக வேலை செய்தார். அதே நேரத்தில் தொழிற்சங்க இயக்கத்திலும் உறுப்பினராக இணைந்து செயல்படத் தொடங்கினார்.
காலப்போக்கில் தொழிற்சங்கத்தில் அவரது செயல்பாடுகள் கவனம் பெற்றதால், முக்கிய தலைவர்களில் ஒருவராக உயர்ந்தார்.
ஹியூகோ சாவேஸ் – அரசியல் திருப்புமுனை
1990களின் ஆரம்பத்தில் வெனிசுலாவை அதிபர் கார்லோஸ் ஆண்ட்ரெஸ் பெரெஸ் ஆட்சி செய்து வந்தார். அவரது ஆட்சியில் ஊழல் குற்றச்சாட்டுகள் அதிகரித்த நிலையில், ராணுவ அதிகாரியான ஹியூகோ சாவேஸ் ஆட்சியை கவிழ்க்க முயன்றார்.
ஆனால் அந்த முயற்சி ஆரம்பத்திலேயே கண்டுபிடிக்கப்பட்டு தோல்வியடைந்தது. இதன் விளைவாக சாவேஸ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
ஆட்சி கவிழ்ப்பு முயற்சி தோல்வியடைந்தாலும், மக்கள் மத்தியில் சாவேஸுக்கு ஆதரவு பெருகியது. அவரின் அரசியல் சிந்தனைகளால் ஈர்க்கப்பட்ட நிக்கோலஸ் மதுரோ, அரசியல் போராட்டங்களில் நேரடியாக ஈடுபடத் தொடங்கினார். சாவேஸை விடுவிக்கக் கோரி நடைபெற்ற இயக்கங்களிலும் அவர் முன்னணியில் இருந்தார்.
1994ஆம் ஆண்டு சிறையிலிருந்து விடுதலையான ஹியூகோ சாவேஸ், ஆயுதப் புரட்சியை கைவிட்டு தேர்தல் அரசியலில் களமிறங்கினார். அந்தப் பயணத்தில் மதுரோவும் அவரது நெருங்கிய கூட்டாளியாக மாறினார்.
அதிபரின் நம்பிக்கையான துணை
1998 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஹியூகோ சாவேஸ் வெனிசுலாவின் அதிபராக வெற்றி பெற்றார். அதனைத் தொடர்ந்து நிக்கோலஸ் மதுரோ நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அவரது செயல்திறன் காரணமாக,
- 2005 – நாடாளுமன்றத் தலைவர்
- 2006 – வெளியுறவுத்துறை அமைச்சர்
- பின்னர் – துணை அதிபர்
என தொடர்ந்து உயர்ந்த பொறுப்புகள் அவருக்குக் கிடைத்தன.
கட்சியிலும் அரசிலும் சாவேஸுக்கு அடுத்த முக்கிய தலைவராக மதுரோவே இருந்தார்.
சாவேஸின் மறைவும், அதிகார மாற்றமும்
இந்த நிலையில், ஹியூகோ சாவேஸுக்கு புற்றுநோய் இருப்பது உறுதியானது. அவர் உயிரிழந்தால் அதிகாரம் யாரிடம் செல்லும் என்ற போட்டி அமைச்சர்கள் மத்தியில் தொடங்கியது.
ஆனால், தனது அரசியல் வாரிசாக மதுரோவே இருக்க வேண்டும் என்பதில் சாவேஸ் உறுதியாக இருந்தார். இதை அவர் வெளிப்படையாக அறிவித்தார்.
அதன்படியே 2013ஆம் ஆண்டு சாவேஸ் மறைந்ததும், நிக்கோலஸ் மதுரோ வெனிசுலாவின் புதிய அதிபராக பொறுப்பேற்றார்.
சிக்கலான ஆட்சி, எதிர்ப்புகள் மற்றும் தாக்குதல்கள்
மதுரோவின் ஆட்சி தொடக்கம் முதலே கடும் சவால்களை எதிர்கொண்டது.
உணவுப் பற்றாக்குறை, மருந்து தட்டுப்பாடு, கடும் பணவீக்கம், வேலைவாய்ப்பு இழப்பு போன்ற பிரச்சினைகள் மக்கள் வாழ்க்கையை கடுமையாக பாதித்தன.
அவரின் தேர்தல் வெற்றிகள் பலமுறை சர்வதேச அளவில் கேள்விக்குள்ளாக்கப்பட்டன. குறிப்பாக 2018 தேர்தல் முடிவுகளை பல நாடுகள் ஏற்க மறுத்தன.
அதே ஆண்டில், கராகஸில் நடந்த ராணுவ அணிவகுப்பின்போது, மதுரோ மீது ட்ரோன் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. அவர் உயிர்தப்பினாலும், ஏழு ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.
அமெரிக்காவுடன் மோதல்
அமெரிக்க எதிர்ப்பு கொள்கையை தொடக்கத்திலிருந்தே மதுரோ கடைப்பிடித்து வந்தார். இதனால் ரஷ்யா மற்றும் சீனாவுடன் அவரது உறவு வலுப்பெற்றது.
இந்த நிலையில் இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராக பதவியேற்ற டொனால்ட் ட்ரம்ப், மதுரோவை நேரடியாக குறிவைத்தார்.
போதைப்பொருள் கடத்தல், பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு என பல குற்றச்சாட்டுகளை முன்வைத்த ட்ரம்ப்,
மதுரோவை கைது செய்ய 450 கோடி ரூபாய் பரிசுத் தொகை அறிவித்ததுடன், வெனிசுலா மீது கடும் பொருளாதார தடைகளையும் விதித்தார்.
கைது மற்றும் மக்கள் எதிர்வினை
ஒரு கட்டத்தில் மதுரோ நாட்டைவிட்டு வெளியேற அனுமதி வழங்கப்பட்டாலும்,
“நான் பிறந்த நாடு இதுதான், நான் இங்கேயே இருப்பேன்” என அவர் மறுத்துவிட்டார்.
இதனைத் தொடர்ந்து, கடந்தாண்டு இறுதியில் கைது திட்டம் வகுக்கப்பட்டது. மோசமான வானிலை காரணமாக அது தள்ளிப்போன நிலையில்,
ஜனவரி 3ஆம் தேதி நிக்கோலஸ் மதுரோவும், அவரது மனைவியும் அமெரிக்க படைகளால் கைது செய்யப்பட்டனர்.
ஒரு நாட்டின் அதிபர் கைது செய்யப்பட்டால், அந்நாட்டில் பெரும் போராட்டங்கள் வெடிப்பது வழக்கம்.
ஆனால், வெனிசுலாவில் அதற்கு மாறாக மக்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.
இந்த மக்களின் எதிர்வினையே,
நிக்கோலஸ் மதுரோ யார்?
அவரது ஆட்சி எத்தகையது?
என்பதற்கான தெளிவான பதிலாக பலரால் பார்க்கப்படுகிறது.