வெனிசுலா மக்களுக்கு ஒரு மாதம் இலவச இணைய சேவை – எலான் மஸ்க் அறிவிப்பு
வெனிசுலாவில் தகவல் தொடர்பு வசதிகள் தடையின்றி செயல்படுவதற்காக, ஸ்டார்லிங் செயற்கைக்கோள் இணையத்தின் மூலம் ஒரு மாத காலத்திற்கு இலவச பிராட்பேண்ட் சேவை வழங்கப்படும் என தொழிலதிபர் எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.
வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவை அமெரிக்க படைகள் கைது செய்து நாட்டை விட்டு வெளியேற்றிய சம்பவம் தொடர்பாக, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
இதுகுறித்து எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்ட அவர், இந்த மாற்றத்திற்குப் பிறகு வெனிசுலா மக்கள் வளமான மற்றும் சிறந்த வாழ்க்கையை நோக்கி நகர்வார்கள் என தெரிவித்துள்ளார்.
மேலும், அந்நாட்டு மக்களுக்கு ஆதரவாக, தகவல் பரிமாற்ற சேவைகள் பாதிக்கப்படாத வகையில், ஸ்டார்லிங் செயற்கைக்கோள் இணையத்தை பயன்படுத்தி ஒரு மாதத்திற்கு இலவச இணைய இணைப்பு வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மதுரோ தலைமையிலான அரசை நீண்ட காலமாக விமர்சித்து வந்த எலான் மஸ்க், 2024ஆம் ஆண்டு தேர்தல் காலத்திலும் ஆட்சி மாற்றத்திற்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்திருந்தார்.
அதேபோல், வெனிசுலா எதிர்க்கட்சி தலைவர் மரியா கொரினா மச்சாடோவுக்கு தொடர்ந்து ஆதரவு வழங்கி வந்த அவர், இயற்கை வளங்கள் நிறைந்த வெனிசுலா, சரியான நிர்வாகத்தின் கீழ் வளர்ச்சி அடையும் திறன் கொண்ட நாடு எனவும் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், மதுரோ மீதான கைது நடவடிக்கையை தொடர்ந்து, மஸ்க் தனது விமர்சனங்களை மேலும் தீவிரப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.