புத்தரின் போதனைகளை உலகளாவிய ரீதியில் பரப்பும் பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது : பிரதமர் மோடி
இந்தியா, புத்தரின் வரலாற்றுப் பாரம்பரியத்தை பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல், அவரது அமைதி, கருணை மற்றும் மனிதநேயப் போதனைகளை உலகமெங்கும் கொண்டு செல்லும் முன்னணித் தூதராகவும் செயல்பட்டு வருகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் அமைந்துள்ள ராய் பித்தோரா கலாச்சார மையத்தில், புத்தருடன் தொடர்புடைய புனித நினைவுப் பொருட்கள் மற்றும் அரிய ஆபரணங்கள் அடங்கிய பிரம்மாண்டமான சர்வதேசக் கண்காட்சியை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
“ஒளியும் தாமரையும் : விழிப்புணர்வை பெற்றவரின் நினைவுச்சின்னங்கள்” என்ற தலைப்பில் நடைபெறும் இந்தக் கண்காட்சியில், 1898ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்ற அகழ்வாய்வில் கண்டெடுக்கப்பட்டு, சுமார் 127 ஆண்டுகளாக வெளிநாடுகளில் பாதுகாக்கப்பட்டு வந்த புத்தரின் புனிதச் சின்னங்கள் தற்போது பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன.
இந்தக் கண்காட்சியில் புத்தரின் புனித எலும்பு அவசேஷங்கள், படிகக் கிண்ணங்கள், தங்கத்தால் செய்யப்பட்ட ஆபரணங்கள் மற்றும் அரிய ரத்தினக் கற்கள் உள்ளிட்ட மதிப்புமிக்க பொருட்கள் காட்சியமைக்கப்பட்டுள்ளன.
இந்த புனிதத்தன்மை நிறைந்த நிகழ்வை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த அனைத்துப் பொருட்களையும் நேரில் பார்வையிட்டார். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஒவ்வொரு பொருளின் வரலாற்றுப் பின்னணியையும் விரிவாக விளக்கினர்.
இதனைத் தொடர்ந்து நிகழ்ச்சி மேடைக்கு வந்த பிரதமர், புத்த பிட்சுக்களுக்கு அவர்கள் அணியும் பாரம்பரிய அங்கிகளை வழங்கி மரியாதை செய்தார். பின்னர் அவர் உரையாற்றும் போது, சுமார் 125 ஆண்டுகளுக்குப் பிறகு நமது புனித நினைவுச் சின்னங்கள் மீண்டும் இந்தியாவிற்கு கிடைத்துள்ளன என்று பெருமையுடன் தெரிவித்தார்.
மேலும், இனி இந்திய மக்கள் புத்தரின் புனித சின்னங்களை நேரில் தரிசித்து, அவரது ஆசீர்வாதங்களைப் பெறும் வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.