2036 ஒலிம்பிக் போட்டிகளை நடத்த இந்தியா முழுவீச்சில் முயற்சி – பிரதமர் மோடி அறிவிப்பு
2036 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளை இந்தியாவில் நடத்துவதற்கான ஏலப் போட்டியில் பங்கேற்க, இந்தியா தீவிரமாக தயாராகி வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் நடைபெறும் 72-வது தேசிய வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டிகளை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் காணொலி வாயிலாக உரையாற்றிய பிரதமர் மோடி, காசியின் மக்களவை உறுப்பினராக இருப்பதில் பெருமை கொள்வதாகக் கூறி, போட்டிகளில் பங்கேற்றுள்ள அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் தனது வாழ்த்துகளை தெரிவித்தார்.
மேலும், வாலிபால் விளையாட்டுக்கும் இந்தியாவின் வளர்ச்சிக்கும் பல ஒற்றுமைகள் உள்ளதாக குறிப்பிட்ட அவர், இரண்டிலும் அணிச் செயல்பாடும், ஒற்றுமையும் இருந்தால்தான் வெற்றி சாத்தியமாகும் என தெரிவித்தார்.
2030 ஆம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை இந்தியா நடத்தவுள்ளதை நினைவூட்டிய பிரதமர், அதற்கு அடுத்த கட்டமாக 2036 ஒலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்துவதற்கான ஏல நடவடிக்கைகளில் இந்தியா தீவிரமாக ஈடுபட்டு வருவதாக அதிகாரபூர்வமாக அறிவித்தார்.