வெனிசுலா மீது அமெரிக்க போர் விமானங்கள் தாக்குதல் – அதிபர் கைது, பதற்றம் உச்சம்

Date:

வெனிசுலா மீது அமெரிக்க போர் விமானங்கள் தாக்குதல் – அதிபர் கைது, பதற்றம் உச்சம்

வெனிசுலாவுக்கு எதிராக அமெரிக்கா நடத்திய திடீர் ராணுவ தாக்குதல் உலக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த நடவடிக்கையின் போது, வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவும், அவரது மனைவி சிலியா ஃப்ளோரஸும் கைது செய்யப்பட்டு நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அமெரிக்கா – வெனிசுலா உறவுகள் கடுமையான மோதல் நிலைக்கு சென்றுள்ளன. இதன் பின்னணியில் வெனிசுலாவின் ராணுவ வலிமை குறித்த விவாதங்களும் தீவிரமடைந்துள்ளன.

வெனிசுலா அரசின் அரசியல் அடக்குமுறைகள் மற்றும் போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்து, அந்த நாட்டின் மீது அமெரிக்கா நீண்ட காலமாக பொருளாதார மற்றும் வர்த்தக தடைகளை விதித்து வருகிறது. சில சமயங்களில் நேரடி ராணுவ நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது. இதனை வெளிநாட்டு தலையீடு என வெனிசுலா அரசு கண்டித்து வருகிறது.

அமெரிக்காவுக்கு எதிரான நிலைப்பாட்டை வலுப்படுத்தும் வகையில், வெனிசுலா அரசு பொதுமக்களையும் அரசியல் போராட்டங்களில் ஈடுபடுத்தி வருவதால், இரு நாடுகளுக்கிடையேயான உறவு தொடர்ந்து பதற்றமாகவே இருந்து வருகிறது.

இந்தச் சூழலில், இன்று அதிகாலை சுமார் 2 மணியளவில், வெனிசுலா தலைநகர் கராக்காஸ், மிராண்டா, லா குவைரா மற்றும் அராகுவா உள்ளிட்ட பகுதிகளில் அமெரிக்க விமானப்படை தீவிர தாக்குதலை நடத்தியதாக தகவல்கள் வெளியாகின. ஏழு இடங்களில் குண்டுவீச்சு நடைபெற்றதாக வெனிசுலா அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த தாக்குதலில் லா கர்லோட்டா விமானத் தளம் மற்றும் ஃபியூர்டி டியூனா ராணுவ தலைமையகம் முக்கிய இலக்குகளாக இருந்ததாக கூறப்படுகிறது. உயிரிழப்பு எண்ணிக்கை குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

இந்நிலையில், தாக்குதல் தொடங்கிய சில மணி நேரங்களிலேயே அதிபர் மதுரோவும், அவரது மனைவியும் கைது செய்யப்பட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். தனது சமூக வலைதளமான ‘ட்ரூத் சோஷியல்’ மூலம் அவர் வெளியிட்ட பதிவில், அமெரிக்க அரசியல் சட்ட விதிகளுக்கு உட்பட்டே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

போதைப்பொருள் கடத்தலில் வெனிசுலா அரசு தொடர்புடையதாகக் கூறி இந்த ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும், இதன் ஒரு பகுதியாக நாட்டின் தலைமை கைது செய்யப்பட்டதாகவும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக, சர்வதேச சட்டங்களை மீறி அமெரிக்கா தாக்குதல் நடத்தியதாகக் கூறி ரஷ்யா, ஈரான், கியூபா உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

வெனிசுலா அரசு இதனை “அரசைக் கவிழ்க்கும் கொடூரமான தாக்குதல்” என வர்ணித்து, நாடு முழுவதும் அவசர நிலை அறிவித்துள்ளது. மேலும், அமெரிக்காவுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபட வேண்டும் எனவும், இந்த அத்துமீறலுக்கு தக்க பதிலடி வழங்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

உலகின் மிகப்பெரிய ராணுவ சக்தியாக கருதப்படும் அமெரிக்காவுக்கு எதிராக வெனிசுலா எடுத்துள்ள இந்த கடும் நிலைப்பாடு, அந்த நாட்டின் உண்மையான படை வலிமை குறித்து உலகளவில் கேள்விகளை எழுப்பியுள்ளது.

தகவல்களின்படி, வெனிசுலா ராணுவத்தில் தற்போது சுமார் 1.20 லட்சம் செயலில் உள்ள வீரர்களும், 1 லட்சம் ரிசர்வ் படையினரும் உள்ளனர். இதற்கு மேலாக, 2.20 லட்சம் தேசிய காவல் படையினரும் இணைக்கப்பட்டுள்ளனர்.

விமானப்படையில் சுமார் 20 ஆயிரம் வீரர்களும், கடற்படையில் 25,500 வீரர்களும் பணியாற்றி வருகின்றனர். ரஷ்யா, ஈரான், பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளிலிருந்து வாங்கப்பட்ட பல்வேறு ஆயுதங்களும் வெனிசுலா படையினரிடம் உள்ளன.

அந்த நாட்டிடம் 15 பழைய F-16 போர் விமானங்கள், 21 சுகோய்-30 விமானங்கள், AMX-13 மற்றும் T-72 டேங்குகள், S-300, புச்சோரா, புக் போன்ற வான்வழி பாதுகாப்பு ஏவுகணை அமைப்புகளும் உள்ளன.

கடற்படையில் ஒரு சப்மரின், ஒரு இத்தாலிய பிரிகேட் கப்பல், 9 காவல் படகுகள், 25 ஆயுதம் தாங்கிய வேகப் படகுகள் மற்றும் 3 லாண்டிங் கப்பல்கள் உள்ளன. இதற்கு மேலாக, “போலிவேரியன் மிலீஷியா” என்ற அரசுக்கு விசுவாசமான துணைப் படையும் செயல்பட்டு வருகிறது.

இந்த மிலீஷியா படையை 2008-ம் ஆண்டு முன்னாள் அதிபர் ஹூகோ சாவெஸ் உருவாக்கினார். இதில் சுமார் 1.23 லட்சம் பயிற்சி பெற்ற வீரர்களும், 2.20 லட்சம் பொதுமக்களும் உறுப்பினர்களாக உள்ளனர். எதிர்காலத்தில் இதன் எண்ணிக்கையை 5 முதல் 8 லட்சம் வரை உயர்த்த முடியும் என மதுரோ கூறியிருந்தார். ஆனால் போதிய பயிற்சி இல்லாதவர்களே அதிகம் என்பதால் அது சாத்தியமில்லை என நிபுணர்கள் கருதுகின்றனர்.

மனித வளம், தொழில்நுட்பம், ஆயுத திறன் மற்றும் பொருளாதாரம் ஆகிய அனைத்திலும், அமெரிக்காவை ஒப்பிடும்போது வெனிசுலா பெரிதும் பின்தங்கியுள்ளது என்பது வெளிப்படையாக தெரிகிறது.

இதனால், நேரடி மோதலுக்கு பதிலாக, சிறிய குழுக்களாக பிரிந்து சபோட்டாஜ் மற்றும் கெரில்லா தாக்குதல் முறைகளை வெனிசுலா மேற்கொள்ள வாய்ப்பு இருப்பதாக பாதுகாப்பு வல்லுநர்கள் கணிக்கின்றனர்.

இந்நிலையில், இந்த இரு நாடுகளுக்கிடையேயான மோதல் எந்த திசையில் செல்லும் என்பது உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

தாமிரபரணி நதி மீட்புக்கு ஆக்கிரமிப்பும் மாசுபாடும் ஊழலும் பெரும் தடையாக உள்ளன – ராஜேந்திர சிங்

தாமிரபரணி நதி மீட்புக்கு ஆக்கிரமிப்பும் மாசுபாடும் ஊழலும் பெரும் தடையாக உள்ளன...

ஜப்பானை முந்தி உலகின் 4-வது பெரிய பொருளாதாரம் : இந்தியாவை பாராட்டிய சீனா

ஜப்பானை முந்தி உலகின் 4-வது பெரிய பொருளாதாரம் : இந்தியாவை பாராட்டிய...

ஜல்லிக்கட்டு போட்டிகள் : தீவிரமாக நடைபெறும் காளைகள் தயாரிப்பு பணிகள்

ஜல்லிக்கட்டு போட்டிகள் : தீவிரமாக நடைபெறும் காளைகள் தயாரிப்பு பணிகள் பொங்கல் திருநாளை...

உதகை மலை ரயில் சேவை மீண்டும் தொடக்கம்!

உதகை மலை ரயில் சேவை மீண்டும் தொடக்கம்! மண் சரிவு காரணமாக மேட்டுப்பாளையம்...