சோகத்தில் முடிந்த புத்தாண்டு உற்சவம் – சுவிஸ் சொகுசு மதுபான விடுதி தீ விபத்து : காரணம் என்ன?
சுவிட்சர்லாந்தில் அமைந்துள்ள ஒரு பிரபலமான சொகுசு மதுபான விடுதியில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 47க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 115க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த பெரும் விபத்து எவ்வாறு ஏற்பட்டது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
சுற்றுலா சொர்க்கத்தில் நிகழ்ந்த பேரழிவு
இயற்கை அழகால் உலகையே கவரும் சுவிட்சர்லாந்தின் ஆல்ப்ஸ் மலைத் தொடரில், கிரான்ஸ்–மொன்டானா என்ற உலகப் புகழ்பெற்ற சுற்றுலா தலம் அமைந்துள்ளது. பனிச்சறுக்கு, கோல்ஃப் உள்ளிட்ட விளையாட்டுகள் காரணமாக ஆண்டுதோறும் உலகின் பல பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் இங்கு குவிகின்றனர். இந்த பிரபலமான ரிசார்ட், தலைநகர் பெர்னிக்கு அருகாமையில் அமைந்துள்ளது.
புத்தாண்டு உற்சாகம் – விபரீதமாக மாறிய தருணம்
2026 ஆம் ஆண்டு புத்தாண்டை வரவேற்க உலகம் முழுவதும் நள்ளிரவு கொண்டாட்டங்கள் கோலாகலமாக நடைபெற்ற நிலையில், கிரான்ஸ்–மொன்டானா ரிசார்ட்டிலும் ஆயிரக்கணக்கானோர் உற்சாகத்தில் மூழ்கியிருந்தனர். தரைத்தளத்தில் சுமார் 300 பேர், மேல்தளத்தில் 40க்கும் மேற்பட்டோர் இசை, நடனம், மதுவிருந்துடன் புத்தாண்டை கொண்டாடிக் கொண்டிருந்தனர்.
இந்த நிலையில், அதிகாலை சுமார் 1.30 மணியளவில் எதிர்பாராத வகையில் திடீரென கொடூரமான தீ விபத்து வெடித்தது.
உயிரிழப்பும் காயங்களும்
இந்த விபத்தில் 16 இத்தாலியர்கள் காணாமல் போயுள்ளதாகவும், 10க்கும் மேற்பட்ட இத்தாலியர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இத்தாலி வெளியுறவுத்துறை அமைச்சர் அன்டோனியோ தஜானி தெரிவித்துள்ளார்.
பரபரப்பை ஏற்படுத்திய வீடியோக்கள்
தீ விபத்து தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன. தீப்பற்றிய பகுதியில் இருந்து வெளியேற ஒரே ஒரு குறுகிய படிக்கட்டு மட்டுமே இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நியூயார்க்கைச் சேர்ந்த ஒரு சுற்றுலாப் பயணி, புத்தாண்டு மதுவிருந்து உச்சத்தில் இருந்த வேளையில், BAR பகுதியிலிருந்து திடீரென ஆரஞ்சு நிற தீப்பிழம்புகள் வெடித்ததை பார்த்ததாக தெரிவித்துள்ளார். இருள் சூழ்ந்த இடத்தில் மக்கள் அலறியடித்து ஓடிய காட்சிகளையும் அவர் பதிவு செய்துள்ளார்.
பயத்தில் தப்பியவர்கள்
தீயிலிருந்து தப்பிக்க பலர் ஜன்னல்களை உடைத்து வெளியேறியதாகவும், உள்ளே குழந்தைகள் சிக்கியிருக்கலாம் என்ற அச்சத்தில் பெற்றோர் கார்களில் வேகமாக சம்பவ இடத்துக்கு வந்ததாகவும் நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர்.
புகை மூட்டமும் தீப்பிழம்புகளும் சூழ்ந்த அந்த தருணம், ஒரு பயங்கர திகில் திரைப்படத்தைப் போன்றே இருந்ததாக பலரும் விவரித்துள்ளனர்.
மாபெரும் மீட்பு நடவடிக்கை
விபத்து ஏற்பட்டவுடன் 13 ஹெலிகாப்டர்கள், 42 ஆம்புலன்ஸ்கள் மற்றும் 150க்கும் அதிகமான மீட்புப் பணியாளர்கள் களமிறக்கப்பட்டு விரைந்து செயல்பட்டனர்.
தீ விபத்துக்கான காரணம் என்ன?
இந்த விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், இதுவரை தீவிரவாதம் அல்லது திட்டமிட்ட தாக்குதலுக்கான ஆதாரம் எதுவும் இல்லை என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது. அவசரகால வெளியேற்ற வழிகள் முறையாக இருந்தனவா? பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்பட்டதா? என்பதையும் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
‘ஃப்ளாஷ்ஓவர்’ அல்லது ‘பேக்ட்ராஃப்ட்’ காரணமா?
தீயணைப்புத் துறையில் பயன்படுத்தப்படும் “எம்பிரேஸ்மென்ட் ஜெனரலைஸ்” (embrasement généralisé) என்ற சொல்லை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். இது மிக அதிக அளவு எரிவாயுக்கள் ஒரே நேரத்தில் தீப்பிடித்து பரவும் அபாயகரமான நிலையை குறிக்கிறது. இவ்வகை விபத்துகள் ‘ஃப்ளாஷ்ஓவர்’ அல்லது ‘பேக்ட்ராஃப்ட்’ என அழைக்கப்படுகின்றன.
பட்டாசுகள், மெழுகுவர்த்திகள் காரணமா?
சுவிட்சர்லாந்திற்கான இத்தாலி தூதர் ஜியான் லோரென்சோ கொர்னாடோ, BAR பகுதியில் யாரோ ஒருவர் பட்டாசு வெடித்ததால் தீ பரவியிருக்கலாம் என சந்தேகம் தெரிவித்துள்ளார். மேலும், ஷாம்பெயின் பாட்டில்களில் வைக்கப்பட்டிருந்த அலங்கார மெழுகுவர்த்திகளே தீக்கு காரணமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
விபத்தில் உயிர் தப்பிய இரண்டு பிரெஞ்சு பெண்கள், எரியும் ஷாம்பெயின் பாட்டில்கள் வெளியே கொண்டு வரப்பட்ட பிறகு, தீ வேகமாக கூரைக்கு பரவியதாக தெரிவித்துள்ளனர்.
அதிர்ச்சியூட்டும் காட்சிகள்
வீடியோக்களில், மதுபானம் பரிமாறும் பணியாளர்கள் எரியும் ஷாம்பெயின் பாட்டில்களை உயர்த்திப் பிடித்தபடி கூட்டத்துக்குள் நடந்து செல்வதும், அவை கூரையைத் தொடும் அளவுக்கு அருகில் இருப்பதும் தெளிவாக பதிவாகியுள்ளது. இசை நிகழ்ச்சியின் போது பயன்படுத்தப்பட்ட வாணவேடிக்கைகளும் தீ விபத்துக்கு காரணமாக இருந்திருக்கலாம் என ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
தேசிய துக்கம் அறிவிப்பு
இந்த பேரவலத்திற்கு மரியாதை செலுத்தும் வகையில், ஐந்து நாட்கள் தேசிய துக்கம் அனுசரிக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இதை நாட்டின் வரலாற்றிலேயே மிகக் கொடூரமான விபத்துகளில் ஒன்றாக குறிப்பிட்டுள்ள சுவிட்சர்லாந்து அதிபர் கை பார்மெலின், இதுபோன்ற சோகம் மீண்டும் நிகழாமல் தடுப்பது நாட்டின் கடமை என தெரிவித்துள்ளார்.
புத்தாண்டு – கனவிலிருந்து கொடூர கனவாக
புதிய நம்பிக்கைகள், கனவுகளுடன் புத்தாண்டைக் கொண்டாட வந்த நூற்றுக்கணக்கானோருக்கு, இந்த இரவு வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத கொடூர கனவாக மாறியுள்ளது.