டிக்கெட் முன்பதிவுக்கு தயாராகும் மக்கள் : இந்தியாவின் முதல் புல்லட் ரயில் சேவை தொடங்கும் நாள் அறிவிப்பு
இந்தியாவின் முதல் அதிவேக புல்லட் ரயில் சேவை தொடங்கும் நாள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பொதுமக்கள் மற்றும் பயணிகளிடையே பெரும் உற்சாகமும் எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது. அந்த சேவை எப்போது, எந்த வழித்தடத்தில் இயக்கப்படும் என்பது குறித்து விரிவாக பார்ப்போம்…
நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட புல்லட் ரயில் திட்டம் குறித்த அறிவிப்பை ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இந்தியாவின் முதல் புல்லட் ரயில் சேவை 2027 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி தொடங்கும் என மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவித்துள்ளார். இது இந்தியாவின் போக்குவரத்து உள்கட்டமைப்பில் ஒரு வரலாற்று தருணமாக அமையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவின் மும்பை நகரத்தையும், குஜராத்தின் அகமதாபாத் நகரத்தையும் இணைக்கும் வகையில், 508 கிலோமீட்டர் நீளத்தில் இந்த அதிவேக ரயில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மும்பை – அகமதாபாத் இடையேயான இந்த புல்லட் ரயில் வழித்தடம் கட்டங்களாக பயணிகளுக்காக திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் அகமதாபாத், வதோதரா, பருச், சூரத், வாபி, தானே மற்றும் மும்பை உள்ளிட்ட முக்கிய நகரங்கள் ஒன்றோடொன்று இணைக்கப்பட உள்ளன.
முதலாவது கட்டமாக சூரத் – பிலிமோரா பகுதியிலும், இரண்டாவது கட்டமாக வாபி – சூரத் இடையிலும், மூன்றாவது கட்டமாக வாபி முதல் அகமதாபாத் வரை புல்லட் ரயில் சேவை தொடங்கப்படும். அதனைத் தொடர்ந்து தானே – அகமதாபாத் மற்றும் இறுதியாக மும்பை – அகமதாபாத் முழு வழித்தடமும் செயல்பாட்டுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புல்லட் ரயில் திட்டம் குஜராத் மற்றும் தாத்ரா–நகர் ஹவேலி பகுதிகளில் 352 கிலோமீட்டர் தூரத்தையும், மகாராஷ்டிரா மாநிலத்தில் 152 கிலோமீட்டர் தூரத்தையும் உள்ளடக்கியதாக உள்ளது.
மொத்த பாதையின் 85 சதவிகிதத்திற்கும் அதிகமான, சுமார் 465 கிலோமீட்டர் நீளமான ரயில் பாதை உயர்த்தப்பட்ட பாலங்களின் மீது அமைக்கப்பட்டு வருகிறது. இதுவரை 326 கிலோமீட்டர் உயர்த்தப்பட்ட கட்டுமானப் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. 25 ஆற்றுப் பாலங்களில் 17 பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.
47 கிலோமீட்டர் நீளமுள்ள சூரத் – பிலிமோரா பகுதி, இந்த திட்டத்தில் மிகவும் முன்னேற்றம் அடைந்த பகுதியாக கருதப்படுகிறது. இங்கு கட்டுமான பணிகளும், தண்டவாள அடித்தள பணிகளும் முழுமையாக நிறைவு பெற்றுள்ளன.
உலகப் புகழ்பெற்ற வைரத் தொழிலை பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள சூரத் புல்லட் ரயில் நிலையம், 26.3 மீட்டர் உயரத்தில், 58,352 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது.
தரைதளம் மற்றும் வாகன நிறுத்தம் உட்பட மூன்று அடுக்குகளுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த நிலையம், தற்போது இறுதிக்கட்ட பணிகளில் உள்ளது. 2027 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று சேவை தொடங்கும் இந்த புல்லட் ரயில், இந்தியாவின் நகரங்களுக்கு இடையேயான பயண அனுபவத்தில் புதிய புரட்சியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.