கடல் சோதனைக்குள் நுழைந்த S4 அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் : இந்திய கடற்பாதுகாப்பில் புதிய உச்ச நிலை
ஆரிஹந்த் வரிசையைச் சேர்ந்த இந்தியாவின் நான்காவது அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலான S4, தனது கடல் சோதனை பயணத்தை தொடங்கியிருப்பது, நாட்டின் கடல்சார் பாதுகாப்பு ஆற்றலை மேலும் உயர்த்தியுள்ளதாக பாதுகாப்புத் துறை வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக, இந்தியாவின் அணு தடுப்பு வலிமையில் இது ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகக் கருதப்படுகிறது. இதன் பின்னணியை விரிவாக பார்ப்போம்…
இந்தியா தற்போது பல அடுக்குகளைக் கொண்ட, நவீனமான கடல்சார் பாதுகாப்பு கட்டமைப்பை உருவாக்கி வருகிறது. இந்த அமைப்பின் முதுகெலும்பாக இந்திய கடற்படை, கடலோர பாதுகாப்புப் படை மற்றும் ஒருங்கிணைந்த கடல் கண்காணிப்பு வலையமைப்புகள் செயல்பட்டு வருகின்றன.
அணுசக்தி இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்கள், விமானம் தாங்கும் போர்க்கப்பல்கள், அதிநவீன போர் கப்பல்கள், கடற்படை விமானங்கள் மற்றும் மனிதர் இல்லா விமானங்கள் (ட்ரோன்கள்) ஆகியவற்றின் மூலம், இந்திய கடற்படை நீண்ட தூர தாக்குதல், கண்காணிப்பு மற்றும் தடுப்பு திறன்களை வலுப்படுத்தியுள்ளது.
அதே நேரத்தில், கடலோர பாதுகாப்புப் படை சட்டவிரோத கடத்தல், தீவிரவாத நடவடிக்கைகள், அனுமதியற்ற மீன்பிடி மற்றும் இயற்கை பேரிடர்களை எதிர்கொள்வதில் முக்கிய பொறுப்பை வகிக்கிறது.
இதனுடன், ரேடார் தொடர்கள், செயற்கைக்கோள் அடிப்படையிலான கண்காணிப்பு, தானியங்கி அடையாள முறைகள் மற்றும் தகவல் ஒருங்கிணைப்பு மையங்கள் உருவாக்கப்பட்டு, கடல்சார் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
அந்தமான் – நிகோபார் தீவுக்கூட்டம் போன்ற முக்கியமான மூலோபாய பகுதிகளில் செயல்படும் ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு அமைப்புகள், கிழக்கு இந்தியப் பெருங்கடலில் இந்தியாவின் பாதுகாப்பை உறுதி செய்கின்றன. மேலும், “SAGAR” என்ற கடல்சார் பாதுகாப்பு பார்வையும், “QUAD” போன்ற பன்னாட்டு கூட்டணிகளும், இந்தியப் பெருங்கடல் பகுதியில் இந்தியாவின் பொறுப்பான பாதுகாப்பு பங்கைக் கட்டியெழுப்ப உதவுகின்றன.
இந்தப் பின்னணியில், ஆரிஹந்த் வரிசையின் நான்காவது அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலான S4, தனது கடல் சோதனைகளை தொடங்கியிருப்பது, இந்தியாவின் கடல்சார் பாதுகாப்பு வலிமையை குறிப்பிடத்தக்க வகையில் உயர்த்தியுள்ளது.
இதுவரை அதிகாரப்பூர்வ பெயரிடல் செய்யப்படாத இந்த கப்பல், 2025 ஆம் ஆண்டு நவம்பர் மாத இறுதியில், விசாகப்பட்டினத்தில் உள்ள கப்பல் கட்டுமான நிலையிலிருந்து புறப்பட்டு, பல்வேறு தொழில்நுட்ப மற்றும் செயல் திறன் பரிசோதனைகளில் ஈடுபட்டு வருகிறது.
சுமார் 7,000 டன் எடையுடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த நீர்மூழ்கிக் கப்பல், 3,500 கிலோ மீட்டருக்கு மேல் தாக்கும் திறன் கொண்ட எட்டு K-4 அணு பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏந்திச் செல்லும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்புத் துறை வட்டாரங்களின் தகவல்படி, ஆரிஹந்த் வரிசையில் உருவாகும் கடைசி நீர்மூழ்கிக் கப்பலாக S4 இருக்கும் என்றும், இதற்குப் பிறகு இந்தியா அடுத்த தலைமுறை S5 வகை அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்கள் வடிவமைப்பில் கவனம் செலுத்தும் என்றும் கூறப்படுகிறது.
S4 கப்பலில் பயன்படுத்தப்பட்டுள்ள கருவிகள் மற்றும் தொழில்நுட்பங்களில் பெரும்பாலானவை நாட்டிலேயே உருவாக்கப்பட்டவை என்பதால், பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு அடைவதற்கான இந்தியாவின் முயற்சிக்கு இது ஒரு முக்கிய அடையாளமாக விளங்குகிறது.
1984 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட மேம்பட்ட தொழில்நுட்ப கப்பல் திட்டத்தின் (ATV) ஒரு பகுதியாகவே ஆரிஹந்த் திட்டம் உருவாக்கப்பட்டது. நிலம், வானம் மற்றும் கடல் ஆகிய மூன்று தளங்களிலும் அணு தடுப்பு திறனை உறுதி செய்யும் இந்தியாவின் அணுசக்தி முக்கோண அமைப்பில், S4 போன்ற நீர்மூழ்கிக் கப்பல்கள் முக்கியமான பங்கினை வகிக்கின்றன.
கடல் சோதனைகள் முழுமையாக நிறைவடைந்து, S4 சேவையில் இணையும் போது, இந்தியாவின் கடல்சார் அணு தடுப்பு வலிமை மேலும் உறுதியடையும் என பாதுகாப்பு நிபுணர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
ஆரிஹந்த் வரிசையின் முதல் கப்பலான INS ஆரிஹந்த், 2016 ஆம் ஆண்டு கடற்படையில் இணைக்கப்பட்டு, 2018 ஆம் ஆண்டு தனது முதல் தடுப்பு ரோந்து பணியை வெற்றிகரமாக நிறைவேற்றியது.
இதனைத் தொடர்ந்து, INS ஆரிகாட் 2024 ஆம் ஆண்டு சேவையில் இணைந்து தற்போது செயலில் உள்ளது. மூன்றாவது கப்பலான INS அரிதமான், கடல் சோதனைகளை முடித்து, நடப்பு ஆண்டில் அதிகாரப்பூர்வமாக சேவையில் சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், தற்போது சோதனைகளை தொடங்கியுள்ள S4, 2027 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் கடற்படையில் இணையும் என மதிப்பிடப்பட்டுள்ளது. INS அரிதமான் மற்றும் S4 ஆகிய இரு கப்பல்களும் நீளமான உடல் வடிவமைப்புடன் உருவாக்கப்பட்டுள்ளதால், அதிக எண்ணிக்கையிலான K-4 ஏவுகணைகளை ஏந்திச் செல்லும் திறன் பெற்றுள்ளன.
ஆரிஹந்த் வகை கப்பல்களில், K-4 மற்றும் குறுகிய தூர தாக்குதல் திறன் கொண்ட K-15 ‘சாகரிகா’ போன்ற மேம்பட்ட கடல்சார் பாலிஸ்டிக் ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. எதிர்காலத்தில், 8,000 கிலோ மீட்டர் தூரம் வரை தாக்கும் K-6 ஏவுகணைகள் இந்த திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டு வருகின்றன.
அதேபோல், அடுத்த தலைமுறை S5 வகை அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களின் ஆரம்ப கட்ட கட்டுமானப் பணிகளும் தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சுமார் 13,500 டன் எடையுடன் உருவாகும் இந்த கப்பல்கள், 2030 களின் தொடக்கத்தில் சேவையில் சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தச் சூழலில், S4 கடல் சோதனைகளை ஆரம்பித்திருப்பதன் மூலம், அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை இயக்கும் உலகின் முக்கிய நாடுகளுள் ஒன்றாக இந்தியா தனது இடத்தை உறுதிப்படுத்தியுள்ளது என்று பாதுகாப்பு துறை சார்ந்த நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.