போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி சூடு தொடர்ந்தால் தலையிடுவோம் – ஈரானுக்கு ட்ரம்ப் கடும் எச்சரிக்கை | சிறப்பு தொகுப்பு
ஈரானில் நிலவி வரும் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு எதிராக வெடித்த மக்கள் எழுச்சியின் போது, பாதுகாப்புப் படையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஐந்து பேர் உயிரிழந்த சம்பவம் உலக கவனத்தை ஈர்த்துள்ளது. அமைதியான முறையில் போராடும் பொதுமக்கள் மீது வன்முறை மேற்கொள்ளப்பட்டால், அதற்கு பதிலடி கொடுக்க அமெரிக்கா தயார் நிலையில் இருப்பதாக முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பல ஆண்டுகளாக ஈரான் பொருளாதார சரிவை எதிர்கொண்டு வருகிறது. அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் விதித்த தொடர் பொருளாதார தடைகள் காரணமாக, ஈரானில் பணவீக்கம் 42.5 சதவீதத்தை தாண்டியுள்ளது. இதனை மேலும் மோசமாக்கும் வகையில், கடந்த ஜூன் மாதத்தில் இஸ்ரேல் நடத்திய தொடர் வான்வழி தாக்குதல்களும், அணுசக்தி அமைப்புகள் மற்றும் ராணுவ தலைமையகங்களை குறிவைத்து அமெரிக்கா நடத்திய தாக்குதல்களும் ஈரானின் பொருளாதாரத்தைக் கடுமையாக பாதித்தன.
கடந்த டிசம்பர் 28ஆம் தேதி, ஈரானின் நாணயமான ரியால் மதிப்பு வரலாற்றில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சி அடைந்து, ஒரு அமெரிக்க டாலருக்கு 14.2 லட்சம் ரியால் என்ற நிலையை எட்டியது. இதன் விளைவாக, சில்லறை வர்த்தகத் துறை பெரும் பாதிப்பை சந்தித்தது. இதனைத் தொடர்ந்து, கடந்த ஞாயிற்றுக்கிழமை தலைநகர் டெஹ்ரானில் உள்ள மிகப்பெரிய செல்போன் சந்தையில் வணிகர்கள் பெருந்திரளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட வணிகர்களை அதிபர் மசூத் பெஷேஷ்கியன் நேரில் சந்தித்து, பொருளாதார நெருக்கடியை சமாளிக்க புதிய திட்டங்களை முன்வைத்திருந்தாலும், வணிகர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து நாடு முழுவதும் தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
இதற்கு முன், மாணவர்கள் நடத்திய போராட்டங்களில், “அதிகாரவாத ஆட்சிக்கு முடிவு வேண்டும்” என்ற கோஷங்கள் எழுந்தன. மேலும், 1979ஆம் ஆண்டு இஸ்லாமிய புரட்சியில் பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் மன்னர் ஷா முகமது ரெசா பஹ்லவியின் மகன் ரெசா பஹ்லவிக்கு ஆதரவு தெரிவித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
ஐந்தாவது நாளாக நீடித்து வரும் இந்த மக்கள் எழுச்சியை அடக்குவதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில், பாதுகாப்புப் படையினரின் துப்பாக்கிச் சூட்டில் இதுவரை ஆறு போராட்டக்காரர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தலைநகருக்கு தென்மேற்கே 300 கிலோமீட்டர் தொலைவில் உள்ள லோரெஸ்தான் மாகாணத்தில் நடந்த போராட்டங்களில் மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், 17 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு முன்பு, டெஹ்ரானில் இருந்து தெற்கே 470 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சஹர்மஹால் – பக்தியாரி மாகாணத்தில் நடைபெற்ற போராட்டங்களில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். இதேபோல், லோர்டேகன், குஹ்தாஷ்ட், இஸ்ஃபஹான் மற்றும் ஃபார்ஸ் மாகாணங்களிலும் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.
இந்த சம்பவங்களை பதிவு செய்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன. அந்தக் காணொளிகளில், கடைகளில் தீப்பற்றி எரியும் காட்சிகளும், பாதுகாப்புப் படையினர் துப்பாக்கியால் சுடுவதும், “இது வெட்கக்கேடானது” என்று பொதுமக்கள் அலறுவதும் பதிவாகியுள்ளது.
இந்த தாக்குதல்களில் ஈடுபட்டதாக, உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனிக்கு நெருக்கமான இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படைகளுடன் தொடர்புடைய ‘பசிஜ்’ என்ற தன்னார்வ துணை ராணுவ அமைப்பு மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், அமெரிக்காவுக்கும் முன்னாள் ஷா குடும்பத்திற்கும் ஆதரவாக செயல்பட்டதாக கூறி, ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், 100க்கும் மேற்பட்ட கடத்தல் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் ஈரான் அரசு தெரிவித்துள்ளது.
இந்த பின்னணியில், அமைதியான போராட்டக்காரர்கள் மீது ஈரான் அரசு துப்பாக்கிச் சூடு நடத்தினால், அவர்களுக்கு ஆதரவாக அமெரிக்கா தலையிடும் என டொனால்டு ட்ரம்ப் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதற்கு பதிலளித்த ஈரானின் உச்ச தலைவர் அலி கமேனியின் மூத்த ஆலோசகரான அலி லாரிஜானி, ஈரானின் உள்நாட்டு விவகாரங்களில் அமெரிக்கா தலையிட்டால், அது மத்திய கிழக்கு முழுவதும் பெரும் குழப்பத்தையும் அமைதியின்மையையும் உருவாக்கும் என்று எச்சரித்துள்ளார்.
வாழ்க்கைச் செலவுகள் கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், ஈரானில் வெடித்துள்ள இந்த மக்கள் எழுச்சி, எதிர்காலத்தில் ஆட்சி மாற்றத்திற்கே வழிவகுக்கக்கூடும் என்று புவிசார் அரசியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.