மார்கழி மாத பௌர்ணமி: திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்
மார்கழி மாத பௌர்ணமி தினத்தை முன்னிட்டு திருவண்ணாமலையில் பெருந்திரளான பக்தர்கள் கிரிவலம் சென்று அண்ணாமலையாரை வழிபட்டனர்.
பஞ்சபூத தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாகவும் போற்றப்படும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில், ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்த தலமாக விளங்குகிறது.
மார்கழி மாத பௌர்ணமி நாளில் இக்கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம். அதனை முன்னிட்டு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை தந்தனர்.
அண்ணாமலையார் கோயில் ராஜகோபுரம் முன்பாக கற்பூரம் ஏற்றி வழிபாடு செய்த பக்தர்கள், 14 கிலோமீட்டர் நீளமுள்ள கிரிவலப் பாதையில் கால்நடையாகச் சென்று சிவபெருமானை பக்தியுடன் தரிசனம் செய்தனர்.