ஷேன் நிகாமின் ‘ஹால்’ படம் சர்ச்சையில்: அக்டோபர் 25 அன்று நீதிபதி நேரில் படம் பார்வை
ஷேன் நிகாம் மற்றும் சாக்ஷி வைத்யா நடித்துள்ள மலையாள திரைப்படம் ‘ஹால்’ தற்போது கடும் சர்ச்சையில் சிக்கியுள்ளது. அறிமுக இயக்குநர் வீரா இயக்கியுள்ள இந்தப் படம், இஸ்லாமிய இளைஞனும் கிறிஸ்தவ பெண்ணும் இடையிலான காதல் கதையை மையமாகக் கொண்டது. செப்டம்பர் 12 அன்று மலையாளம், தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், தணிக்கை வாரியம் படத்தில் இடம்பெற்றுள்ள மட்டிறைச்சி பிரியாணி காட்சி மற்றும் 15 வசனக் காட்சிகளை நீக்க வேண்டும் என அறிவுறுத்தியது. இதற்கு படக்குழு மறுப்பு தெரிவித்ததால், சான்றிதழ் வழங்கப்படவில்லை. இதையடுத்து, ‘ஹால்’ படக்குழு கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
அவர்கள் மனுவில், “நீதிமன்றம் அல்லது நீதிபதி நியமிக்கும் பிரதிநிதி ஒருவர் படம் முழுமையாகப் பார்த்து முடிவெடுக்க வேண்டும்” என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது.
இந்நிலையில், கத்தோலிக்க காங்கிரஸ் தாமரைசேரி மறைமாவட்டத் தலைவர் கே. சாக்கோ மனு தாக்கல் செய்து, “இந்தப் படத்தில் சமூக நல்லிணக்கத்துக்கு கேடு விளைவிக்கும் மற்றும் கிறிஸ்தவ சமூகம் உணர்வுகளை புண்படுத்தும் காட்சிகள் உள்ளன” என்று குற்றம்சாட்டினார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி வி. ஜி. அருண், தயாரிப்பாளர்கள் முன்வைத்த கோரிக்கையை பரிசீலித்தபோது, “படத்தை நேரில் பார்க்க வேண்டியது அவசியம்” என்று தெரிவித்தார்.
இதனடிப்படையில், வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது நீதிபதி, அக்டோபர் 25 ஆம் தேதி (சனிக்கிழமை) மாலை 7 மணிக்கு காக்கநாட்டில் உள்ள ஒரு திரையரங்கில் படம் பார்க்கப்படவுள்ளது என்று அறிவித்தார்.
அத்துடன், அந்த நேரத்தில் தணிக்கை வாரிய அதிகாரிகளும், கத்தோலிக்க காங்கிரஸின் தாமரைசேரி மறைமாவட்டத் தலைவர் கே. சாக்கோவும் உடனிருக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.