அமெரிக்கா விரைவில் இந்தியப் பொருட்களுக்கான வரியை 15–16% ஆகக் குறைக்கும்: இரு நாடுகளும் ஒப்பந்தத்துக்கு நெருக்கம்
இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்குச் செல்லும் பொருட்களின் மீது விதிக்கப்பட்டுள்ள இறக்குமதி வரியை 15 முதல் 16 சதவீதம் வரை குறைக்க அமெரிக்கா விரைவில் ஒப்புக்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.
தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்ததாவது: வரி குறைப்பைச் சார்ந்து இந்தியா–அமெரிக்கா இடையே நீண்டகால பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுவருகின்றன. அவை தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. இதன் மூலம் வர்த்தகத் துறையில் இரு நாடுகளும் புதிய ஒத்துழைப்பை ஏற்படுத்திக் கொள்ளும் என நம்பப்படுகிறது.
இப்பேச்சுவார்த்தைகளில் வேளாண்மை மற்றும் எரிசக்தி முக்கிய அம்சங்களாக இருந்தன. அதன் ஒரு பகுதியாக, இந்தியா ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை படிப்படியாகக் குறைக்கும் முயற்சியில் ஈடுபடலாம் என கூறப்படுகிறது.
அதே நேரத்தில், மரபணு மாற்றப்படாத அமெரிக்க சோளம், சோயாபீன் போன்ற வேளாண் பொருட்களின் இறக்குமதியை இந்தியா அதிகரிக்க ஒப்புக்கொள்ளும் வாய்ப்பும் அதிகம். மேலும், இரு நாடுகளுக்குமிடையே வரி மற்றும் சந்தை அணுகல் போன்ற விஷயங்களை அவ்வப்போது மதிப்பாய்வு செய்யும் நடைமுறை இந்த ஒப்பந்தத்தில் இடம்பெற உள்ளது என வட்டாரங்கள் கூறுகின்றன.
இதுகுறித்து இந்தியாவின் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் அல்லது அமெரிக்க வெள்ளை மாளிகை இதுவரை எந்த உத்தியோகபூர்வ கருத்தையும் வெளியிடவில்லை.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் சமீபத்தில் தெரிவித்ததாவது:
“பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைபேசியில் பேசியேன். வர்த்தகமே எங்கள் பேச்சின் முக்கிய அம்சமாக இருந்தது. குறிப்பாக, எரிசக்தி விஷயத்தில், இந்தியா ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் இறக்குமதியை குறைக்கும் என பிரதமர் மோடி உறுதியளித்தார்,” என்றார்.
பிரதமர் மோடியும் ட்ரம்புடன் பேசியதை உறுதி செய்திருந்தாலும், அந்த உரையாடலின் விவரங்களை வெளிப்படுத்தவில்லை. தற்போது, இந்தியப் பொருட்களுக்கு அமெரிக்கா சுமார் 50 சதவீத வரி விதித்து வருகிறது. இந்த புதிய ஒப்பந்தம் அமல்படுத்தப்பட்டால், அது மூன்றில் ஒரு பங்காக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.