திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோயில் ராஜகோபுரத்தில் போதை நபர் அட்டூழியம்
திருப்பதியில் அமைந்துள்ள கோவிந்தராஜ சுவாமி ஆலயத்தின் ராஜகோபுரத்தின் உச்சியில் மது அருந்திய நிலையில் ஏறிய ஒருவர், அங்கிருந்த தங்க கலசங்களை சேதப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சம்பவத்தில் தொடர்புடைய அந்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருப்பதி ரயில் நிலையத்திற்கு அருகில், திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் கோவிந்தராஜ சுவாமி கோயில் அமைந்துள்ளது. இரவு நேரத்தில் கோயில் கதவுகள் மூடப்பட்ட பிறகு, தேவஸ்தான பணியாளர்கள், மாநில காவலர்கள் மற்றும் ஆயுதப்படை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அந்த நேரத்தில் கோயில் வளாகத்திற்குள் நுழைந்த ஒரு அடையாளம் தெரியாத நபர், திடீரென ராஜகோபுரத்தின் மீது ஏறி, மேல்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த தங்க கலசங்களை உடைத்து சேதப்படுத்தினார்.
தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு மற்றும் மீட்பு பணியாளர்கள், சுமார் மூன்று மணி நேரம் நீண்ட முயற்சிக்குப் பிறகு அந்த நபரை பாதுகாப்பாக கீழே இறக்கினர்.
பின்னர், மது போதையில் இருந்த அந்த நபரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தியதில், அவர் தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த திருப்பதி என்பவர் என்பது உறுதி செய்யப்பட்டது.