ஆருத்ரா தரிசனப் பெருவிழா – சிதம்பரம் நடராஜர், நெல்லையப்பர் உள்ளிட்ட திருக்கோயில்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்
ஆருத்ரா தரிசன திருவிழாவை முன்னிட்டு கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற நடராஜர் ஆலயத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வழிபாடு மேற்கொண்டனர்.
சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன விழாவின் ஒரு பகுதியாக நேற்று கோலாகலமாக தேரோட்டம் நடைபெற்றது. தேரிலிருந்து எழுந்தருளிய சுவாமிகள், கோயில் வளாகத்தில் உள்ள ஆயிரம் கால் மண்டபம் என அழைக்கப்படும் ராஜசபைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இன்று அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பாக நடராஜ மூர்த்திக்கும் சிவகாம சுந்தரி அம்மனுக்கும் பால், தயிர், தேன், விபூதி, பஞ்சாமிர்தம் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பான மகா அபிஷேகம் நடைபெற்றது. இதற்கு முன் நடராஜ பெருமானுக்கு ஸ்வர்ணாபிஷேகமும் நடைபெற்றது.
இந்த அபிஷேக நிகழ்வுகளை காண கோயில் வளாகத்தில் திரண்டிருந்த பக்தர்கள் “சிவ சிவா” என்ற முழக்கத்துடன் கைகளை கூப்பி மனமுருகி வழிபட்டனர். அதிகாலை முதலே பெருந்திரளான சிவனடியார்கள் கூடியதால் கோயில் வளாகம் நிரம்பி வழிந்தது.
அதேபோல், சென்னை திருவொற்றியூரில் உள்ள தியாகராஜ சுவாமி கோயிலிலும் ஆருத்ரா தரிசன விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. அதிகாலையில் கோயில் மண்டபத்தில் நடராஜர் மலர் அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இதனைத் தொடர்ந்து சப்பரத்தில் எழுந்தருளிய நடராஜர், கோயில் உள்பிரகாரத்தில் மூன்று முறை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பின்னர், நடராஜரின் முகம் துணியால் மூடப்பட்டு, அவர் சன்னதிக்குத் திரும்பும் பாரம்பரிய வைபவமும் வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
நெல்லை மாநகரின் டவுன் பகுதியில் அமைந்துள்ள நெல்லையப்பர் கோயிலில் ஆருத்ரா தரிசனப் பெருவிழா பக்தி பரவசத்துடன் நடைபெற்றது. கடந்த 26ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய இந்த விழாவில் தினமும் சுவாமியும் அம்பாளும் வீதி உலா வந்து அருள்பாலித்தனர்.
விழாவின் முக்கிய நிகழ்வான ஆருத்ரா தரிசன நாளில் அதிகாலையில் தாமிர சபையில் எழுந்தருளிய நடராஜ பெருமானுக்கும் சிவகாமி அம்மனுக்கும் மகா அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் பசு தீபாராதனை நிகழ்ச்சி நடைபெற்ற நிலையில், ஓதுவா மூர்த்திகள் திருவெம்பாவை பாடல்களைப் பாட நடராஜ பெருமானின் திருநடனக் காட்சி அரங்கேறியது. இதில் பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியில் உள்ள சங்கரநாராயண சுவாமி ஆலயத்திலும் ஆருத்ரா தரிசனம் விமரிசையாக நடைபெற்றது. தென் தமிழகத்தின் முக்கிய சிவத்தலங்களில் ஒன்றான இந்த கோயிலில், கடந்த 25ஆம் தேதி திருவெம்பாவை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தினமும் சுவாமியும் அம்பாளும் பல்வேறு வாகனங்களில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஆருத்ரா தரிசன நாளில் காலை 5.10 மணிக்கு சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள கோவில்பட்டி பகுதியில் அமைந்துள்ள கைலாசநாதர் கோயிலில் ஆருத்ரா தரிசன தாண்டவ தீபாராதனை மிகச் சிறப்பாக நடைபெற்றது. மார்கழி திருவாதிரை விழாவின் முக்கிய நிகழ்வாக பச்சை சாத்தி தாண்டவ தீபாராதனை கோயில் மண்டபத்தில் நடத்தப்பட்டது.
ராஜ அலங்காரத்தில் காட்சியளித்த நடராஜ பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று பக்தி உச்சத்தில் சாமி தரிசனம் செய்தனர்.
கும்பகோணம் அருகே உள்ள சிவகுருநாதன் திருக்கோயிலில் ஆருத்ரா தரிசன விழா கோலாகலமாக நடைபெற்றது. திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலில் இருந்து கொண்டு வரப்பட்ட நடராஜர் திருவுருவத்திற்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் தீபாராதனைகள் செய்யப்பட்டது.
யாக வேள்விகள் நடத்தப்பட்டு, மேளதாள முழக்கத்துடன் நடைபெற்ற இந்த விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். பின்னர் கோயில் நிர்வாகம் சார்பில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
பஞ்சபூத தலங்களில் அக்னி ஸ்தலமாக போற்றப்படும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு அதிகாலையில் நடை திறக்கப்பட்டு ஆகம மரபுப்படி அண்ணாமலையாருக்கும் உண்ணாமுலை அம்மனுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
இதனைத் தொடர்ந்து ஆயிரம் கால் மண்டபத்தில் எழுந்தருளிய நடராஜ பெருமானுக்கும் சிவகாமி அம்மனுக்கும் சந்தனம், விபூதி, தேன், தயிர், பால், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட திரவியங்களால் விசேஷ அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் நடராஜ பெருமானுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இந்த நிகழ்விலும் பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.