இளைஞர்களின் பங்களிப்பால் இந்தியா வல்லரசாக உருவெடும் – குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் உறுதி
செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்கள் வேகமாக வளர்ந்து வரும் சூழலில், பட்டப்படிப்பு மட்டும் இனி போதுமானதல்ல; தினசரி அடிப்படையில் அறிவை மேம்படுத்திக் கொள்வது அவசியம் என மாணவர்களுக்கு குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தினார்.
சென்னை வானகரத்தில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 34-ஆவது பட்டமளிப்பு விழாவில் அவர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழக அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் கவுரவ விருந்தினர்களாக பங்கேற்றனர்.
பட்டங்களை வழங்கிய பின்னர் விழாவில் உரையாற்றிய குடியரசு துணைத் தலைவர், மாணவர்கள் அனைவரும் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அறிவில் தொடர்ந்து புதுப்பித்து கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.
மேலும், 2047 ஆம் ஆண்டை இந்தியாவின் வளர்ச்சி இலக்காக பிரதமர் மோடி நிர்ணயித்துள்ள நிலையில், இன்றைய இளைஞர்களின் திறமை மற்றும் உழைப்பால் அதற்கு முன்பே இந்தியா உலகின் முன்னணி வல்லரசாக உயர வாய்ப்புள்ளதாக தனக்கு உறுதியான நம்பிக்கை இருப்பதாக சி.பி.ராதாகிருஷ்ணன் பெருமிதத்துடன் தெரிவித்தார்.