வான் பாதுகாப்பில் புதிய வேகம் : S-350 ‘வித்யாஸ்’ அமைப்பை இந்தியாவில் உற்பத்தி செய்ய ரஷ்யா ஒப்புதல் – சிறப்பு தொகுப்பு
பாகிஸ்தான் மற்றும் சீனாவிலிருந்து எழும் வான்வழி அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் நோக்கில், இந்தியாவின் பாதுகாப்புத் திறனை மேலும் வலுப்படுத்த ரஷ்யா முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, S-350 ‘வித்யாஸ்’ என்ற நவீன வான் பாதுகாப்பு அமைப்பை இந்தியாவிற்கு வழங்கவும், அதனை இந்திய மண்ணிலேயே தயாரிக்க அனுமதிக்கவும் ரஷ்யா சம்மதம் தெரிவித்துள்ளது. இந்த முக்கிய முடிவு குறித்த விரிவான தகவல்களை இப்போது பார்க்கலாம்…
ரஷ்ய அரசு, S-350 வித்யாஸ் வான் பாதுகாப்பு அமைப்பை இந்தியாவிற்கு சலுகை அடிப்படையில் வழங்க முன்வந்துள்ளது. இந்த ஒப்பந்தத்தில் முழுமையான தொழில்நுட்ப பரிமாற்றமும் சேர்க்கப்பட்டுள்ளதால், இந்தியாவில் இதன் உற்பத்தி, பராமரிப்பு மற்றும் மேம்பாட்டை மேற்கொள்ள முடியும். இது “ஆத்மநிர்பர் பாரத்” திட்டத்தின் இலக்குகளோடு முழுமையாக ஒத்துப்போகும் நடவடிக்கையாகக் கருதப்படுகிறது.
ரஷ்யாவின் பிரபல பாதுகாப்பு நிறுவனம் அல்மாஸ்–ஆன்டேய் (Almaz-Antey) உருவாக்கிய S-350 வித்யாஸ், பழைய தலைமுறை S-300 வான் பாதுகாப்பு அமைப்புகளுக்குப் பதிலாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ரோஸ்டெக் (Rostec) நிறுவனத்தின் தகவலின்படி, இந்த அமைப்பு S-400 மற்றும் இந்தியாவின் ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு கட்டமைப்புடன் எந்த இடையூறும் இல்லாமல் இணைந்து செயல்படக்கூடியதாக உள்ளது.
இந்த அமைப்பு, இந்தியாவின் நடுத்தர மற்றும் உள் அடுக்கு வான் பாதுகாப்பு வலையமைப்பை மேலும் வலுப்படுத்தும். குறிப்பாக, பாகிஸ்தான் மற்றும் சீனாவின் வான்வழி தாக்குதல்களுக்கு எதிராக வேகமான, துல்லியமான மற்றும் சக்திவாய்ந்த எதிர்வினை அளிக்கும் திறன் இதற்கு உள்ளது.
S-350 வித்யாஸில் பொருத்தப்பட்டுள்ள நவீன AESA ரேடார் தொழில்நுட்பம், குறைந்த உயரத்தில் பறக்கும் ஏவுகணைகள், தந்திரமான தாக்குதல் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை மிகுந்த துல்லியத்துடன் கண்டறிந்து அழிக்கக்கூடியது. நிலத்திலிருந்தும், கடல் வழியாக கப்பல்களில் இருந்து ஏவப்படும் ஏவுகணைகளையும் இடைமறித்து வீழ்த்தும் திறனையும் இது கொண்டுள்ளது.
தற்போது இந்தியாவில் மூன்று S-400 வான் பாதுகாப்பு அமைப்புகள் செயல்பாட்டில் உள்ளன. மேலும் இரண்டு அமைப்புகள் விரைவில் இணைக்கப்படவுள்ள நிலையில், S-350 வித்யாஸ் சேர்க்கப்படுவதால் முக்கியமான பாதுகாப்பு மையங்கள் மற்றும் மூலோபாயப் பகுதிகளைச் சுற்றிய பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்படும். ஆகாஷ், பராக்-8 போன்ற உள்நாட்டு பாதுகாப்பு அமைப்புகளுடன் இணைந்து, பல அடுக்கு கொண்ட விரிவான வான் பாதுகாப்பு வலையமைப்பை உருவாக்கும் வகையில் இது செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆப்ரேஷன் “சிந்தூர்” நடவடிக்கையின் போது, பாகிஸ்தானின் வான்வழி அச்சுறுத்தல்களை இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்புகள் வெற்றிகரமாக முறியடித்தன. அதுபோன்ற சூழ்நிலைகளில், குறிப்பாக பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் உயரமான எல்லைப் பகுதிகளில் உள்ள முக்கியமான இடங்களில், S-350 அமைப்பு பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் என பாதுகாப்பு நிபுணர்கள் கருதுகின்றனர்.
JF-17, J-10 போன்ற போர்விமானங்கள், பாபர் வகை கப்பல் ஏவுகணைகள், ட்ரோன் தாக்குதல்கள் மற்றும் நவீன வெடிமருந்து தாக்குதல்களை எதிர்கொள்ளும் வகையில் S-350 வித்யாஸ் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த அமைப்பு இந்தியாவின் வான் பாதுகாப்புத் திறனை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், எப்போதும் உயர்ந்த தற்காப்பு தயார் நிலையில் இருக்க வேண்டிய அழுத்தத்தை குறைத்து, இந்திய விமானப்படைக்கு அதிக செயல்திறன் மற்றும் செயல்பாட்டு சுதந்திரத்தை வழங்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.